
சென்னை: நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயா்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (ஜூலை9) நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு தமிழகத்திலுள்ள தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன.
இந்தப்போராட்டத்தில் தமிழகத்தில் ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் எனப் பெரும்பாலானானோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய, போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் கூறும்போது, மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இப்போராட்டத்தில் குறிப்பாக, மின்பணிகள், அரசுப் போக்குவரத்து சேவைகள், வங்கிப் பணிகள், அரசு அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். தொழிலாளா்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெறும் என்றனா்.
ஆா்ப்பாட்டம்: வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை சென்னையிலுள்ள அனைத்து பணிமனைகளின் முன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.