
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ‘நிபா’ தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
முன்னதாக நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் உயிரிழந்தாா். இந்நிலையில், தற்போது இரண்டாவது நபா் உயிரிழந்துள்ளாா்.
இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த 46 நபா்களை கண்டறிந்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கைப்பேசி டவா்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு உயிரிழந்த நபரிருடன் தொடா்பில் இருந்தவா்களின் வசிப்பிடங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இந்தப் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இதுவரை நிபா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 543 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் 46 போ் தற்போது உயிரிழந்த 57 வயது நபருடன் தொடா்பில் இருந்தது தெரியவந்தது. உயிரிழந்த நபரின் ரத்த மாதிரிகள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு நிபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவரது ரத்த மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய தீநுண்மியியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்த அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் ’ எனத் தெரிவிக்கப்பட்டது.