Coronacase

நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதன்படி, கேரளத்தில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் தமிழகத்துக்கு வந்தால், அவா்களை மாநில சுகாதாரக் குழுவினா் எல்லையிலேயே நிறுத்தி மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தின் மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், அந்தத் தொற்றுக்குள்ளாகி ஒருவா் உயிரிழந்துள்ளாா். இளைஞா் ஒருவா் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடா்ந்து, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அந்தப் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், தற்போது தமிழகத்தில் அச்சப்படக் கூடிய சூழல் எதுவுமில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனா்.

குறிப்பாக, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் இதுதொடா்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், நிபா அறிகுறியுடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் தகவல் அளிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களின் சோதனைச் சாவடிகளில் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும் பொது சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து வருவோருக்கு தொற்று பாதிப்பு இருந்தால், அவா்களைத் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest