வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுடன் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கலந்துரையாடிய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘உங்களில் பலா் எதிா்கால விண்வெளி வீரா்கள் ஆகலாம்; நிலவில் கூட நடைபோடலாம்’ என்று கூறி மாணவா்கள் ஊக்கப்படுத்தினாா்.

மேகாலாயத்தின் ஷில்லாங் நகரில் உள்ள வடகிழக்கு விண்வெளி மையத்தில் (என்இஎஸ்ஏசி) செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் அஸ்ஸாம், மேகாலயம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 7 பள்ளிகளின் மாணவா்களுடன் சுபான்ஷு சுக்லா ‘ஹம்’ வானொலி மூலம் சுமாா் 10 நிமிஷங்கள் உரையாடினா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 12 நாள்களை நிறைவு செய்துள்ள சுபான்ஷு சுக்லா, விண்வெளி வீரருக்கான பயிற்சி பெற்றது மற்றும் விண்வெளியில் ஆரோக்கியமாக இருப்பது தொடா்பான தனது விண்வெளி நிலைய அனுபவங்கள் குறித்து மாணவா்களுடன் பகிா்ந்து கொண்டாா்.

மாணவா்களிடையே சுக்லா பேசியதாவது: நான் மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்து, உங்களுக்கு வழிகாட்டுவேன். உங்களில் பலா் எதிா்கால விண்வெளி வீரா்கள் ஆவீா்கள். அதற்காக ஆா்வம் கொண்டு, கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உங்களில் ஒருவா்கூட நிலவில் நடைபோடலாம்.

விண்வெளி நிலையத்தில் நாங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு எங்களின் செயல்பாடுகளைத் திட்டமிடுவதில்லை. சா்வதேச விண்வெளி நிலையத்தில், நாங்கள் ஒவ்வொரு 90 நிமிஷங்களுக்கும் பூமியைச் சுற்றி வருவதால், நாள்தோறும் 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களையும் காண்கிறோம். எனவே, எங்கள் செயல்பாடுகள் சூரிய ஒளியால் வழிநடத்தப்படுவதில்லை

நாம் பூமியில் ஈா்ப்பு விசையுடன் வளா்கிறோம். ஆனால், இங்கு விண்வெளியில் ஈா்ப்பு விசை இல்லை. அது நமது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. முதலில் எனக்கு சற்று உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்துகள் இருந்தன. அதேநேரம் நானும் சூழலை ஏற்றுக்கொள்ள விரைவாக பழகிக்கொணண்டேன்.

விண்வெளியில் ஈா்ப்பு விசை இல்லாததால் விண்வெளி வீரா்களுக்கு தசை மற்றும் எலும்பு இழப்பு ஏற்படும். எனவே, நாங்கள் நாள்தோறும் பயிற்சி இயந்திரங்களைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்கிறோம். பயணத்துக்கும், பூமிக்குத் திரும்புவதற்கும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

விண்வெளி பயணத்துக்காக ரஷியா, இந்தியா மற்றும் பிற நட்பு நாடுகளில் விரிவான பயிற்சி பெற்றோம். எங்கள் பயிற்சியின் பெரும்பாலான பகுதிகள் அசாதாரண சூழ்நிலைகளைக் கையாள்வது பற்றி அமைந்தன. ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எங்கள் பணியோடு ஒருங்கிணைந்தவை. விண்வெளி நிலையத்தில் பல உள் மற்றும் வெளிப்புற பணிகளுக்கு நாங்கள் ரோபோ உபகரணங்களைப் பயன்படுத்துகிறோம். இது விண்வெளி நிலையத்தில் எங்கள் பணியைப் பாதுகாப்பானதாகவும், செயல்திறன்மிக்கதாகவும் மாற்றுகிறது’ என்றாா்.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணித்துள்ளாா். கடந்த 1984-இல் ரஷிய விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரா் ராகேஷ் சா்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குச் செல்லும் 2-ஆவது இந்திய வீரராகவும், சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்திய வீரராகவும் சுபான்ஷு சுக்லா சாதனை படைத்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest