AP21204650297904

முன்னாள் வீரர்கள் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கலந்துகொள்ளும் WCL (World Championship of Legends) டி20 தொடர் ஜூலை 18 முதல் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

இவ்வாறிருக்க, ஜூலை 20-ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே போட்டி திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் உடனான போட்டியில் அவசியம் விளையாட வேண்டுமா? என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருக்கிறது.

WCL - India vs Pakistan
WCL – India vs Pakistan

ஜூலை 20-ம் தேதி போட்டிக்கு முன்னதாக ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் ஆகிய முன்னாள் வீரர்கள் பாகிஸ்தானுடனான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்வதாக WCL போட்டி நிர்வாகம் அறிவித்தது.

மேலும், “இப்போட்டியின் திட்டமிடலால் பலரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறோம்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்.” என்று WCL போட்டி நிர்வாகம் மன்னிப்பு கேட்டு விளக்கமளித்து.

அதற்குப் பிறகு, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய வீரர்கள் உட்பட பலரிடமும் இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடனான போட்டிகளில் பங்கேற்பீர்களா என்ற கேள்விகள் தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டு வந்தன.

தற்போது, WCL புள்ளிப்பட்டியலில், பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு போட்டி ரத்து என 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணி 3 போட்டிகளில் 2 தோல்வி ஒரு போட்டி ரத்து எனக் கடைசி இடத்திலும் இருக்கிறது.

இருப்பினும், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிப்பதால், அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாடும் சூழலும் உருவாக குறைந்தபட்ச வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், லீக் சுற்றில் பாகிஸ்தானுடனான போட்டியில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்திருந்த ஷிகர் தவானிடம், அரையிறுதியில் பாகிஸ்தானுடன் ஆடும் சூழல் வந்தால் தங்களின் நிலைப்பாடு அப்படியே இருக்குமா என்று கேள்வியெழுப்பிய நிருபரிடம் அவர் கோபப்பட்டது பேசுபொருளாகியிருக்கிறது.

இது தொடர்பான வீடியோவில் நிரூபரிடம் தவான், “நீங்கள் இந்தக் கேள்வியைத் தவறான நேரத்தில், தவறான இடத்தில் கேட்கிறீர்கள்.

நீங்கள் இதைக் கேட்டிருக்கவே கூடாது. நான் முன்பு விளையாடவில்லையெனில், இப்போதும் விளையாட மாட்டேன்” என்று கூறினார்.

விளையாட்டில் அரசியல் கலப்பது தொடர்பாக உங்களின் கருத்துக்களை கமென்ட்டில் பதிவிடவும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest