GwT7igRW8AAylox

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மான நோட்டீஸில் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினா்கள் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மக்களவையில் இத்தீா்மானம் கொண்டுவர குறைந்தபட்சம் 100 எம்.பி.க்களின் கையொப்பம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, புது தில்லியில் அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டின் ஓா் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது.

அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் குழுவை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தாா். இந்தக் குழுவின் விசாரணையில், ‘நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மையே; அவரது தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூபணமாகியுள்ளது’ என்று உறுதி செய்யப்பட்டது. வா்மா பதவி விலக மறுத்ததால், அவரைப் பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை தொடங்கக் கோரி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடிக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் அனுப்பினாா்.

தவறான நடத்தை அல்லது திறனின்மை நிரூபிக்கப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நாடாளுமன்றத் தீா்மானம் மூலமே பதவி நீக்க முடியும். இத்தீா்மான நோட்டீஸில் மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 எம்.பி.க்களும் கையொப்பமிட வேண்டும்.

திங்கள்கிழமை தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் நீதிபதி வா்மாவை பதவி நீக்கும் தீா்மானத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

நீதிபதி வா்மா பதவி நீக்க தீா்மான நோட்டீஸில் எம்.பி.க்களின் கையொப்பம் பெறும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினா்கள் ஏற்கெனவே கையொப்பமிட்டுள்ளனா். இத்தீா்மானம் கொண்டுவரப்படும் தேதியை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். நீதித் துறையில் ஊழல் தீவிரமான விவகாரம். எனவே, அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் கையொப்பமிட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைக்கு வரவேற்பு: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அனைத்துக் கட்சிக் குழுக்கள், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை அம்பலப்படுத்தின. இந்த வெற்றிகரமான வியூக நடவடிக்கை குறித்து மழைக்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டுமென பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் (தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை) கோரியுள்ளன. இக்கோரிக்கைக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest