Air-india-flight-edi

நேபாளத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

செப். 17 வரை நேபாளத்தில் இருந்து இந்தியா வருவதற்கோ அல்லது இந்தியாவில் இருந்து நேபாளம் செல்வதற்கோ விமானம் முன்பதிவு செய்திருந்தால், அதனை எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி பயண தேதியை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்றும் அல்லது பயணத்தை ரத்து செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இதற்கான முழு தொகையும் பயணிகள் கணக்கிற்கு திரும்ப செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சிரமமின்மையை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”நேபாளத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முன்பதிவு செய்த பயணிகளுக்கு 2025 செப்டம்பர் 17 வரை நேபாளத்திற்கு அல்லது அங்கிருந்து பயணிக்க நாங்கள் சலுகை அளிக்கிறோம். இதன்படி, பயணிகளின் வசதிக்கேற்ப தங்கள் பயண தேதிகளை எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

மாற்றாக தங்கள் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகள் அவர்கள் செலுத்திய முழு தொகையும் பயணிகளுக்கு அல்லது சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு திரும்ப செலுத்தப்படும்

பயணிகள் எளிமையாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தளத்தில் தியா என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தாலான உதவியாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தளத்தில் மட்டுமின்றி வாட்ஸ் ஆப், ஸ்மார்ட்போன் செயலிகள் வாயிலாகவும் பயணிகள் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் முகநூல், வாட்ஸ்ஆப், எக்ஸ் போன்ற சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊழலுக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட இளம் தலைமுறையினர் பலர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியும் காவல் துறையினர் கலைக்க முயன்றனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது.

இதையும் படிக்க | நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

Air India Express offers free rescheduling, full refunds for Nepal-bound passengers amid ongoing protest

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest