WhatsApp-Image-2025-06-25-at-2.46.00-PM

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சாலையின் இருபுறங்களிலும் ராணுவத் தளங்கள் தென்பட்டபோதே, லே நகரை நெருங்கிவிட்டோம் எனப் புரிந்தது. ஏழடி முதல் பத்தடி உயரத்திலான வெளிச்சுவர், அதன் மீது சுருள்சுருளான முள் வேலி. ஆங்காங்கே ராணுவ வாகனங்கள். ஒவ்வொரு கட்டட நுழைவாயிலிலும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.

புகைப்படங்கள் எடுக்கக்கூடாது, ட்ரோன்கள் பறக்கவிடக்கூடாது போன்ற வாசகங்கள் கொண்ட எச்சரிக்கை பலகைகள் வழி நெடுகிலும் இருந்தன.

கடல் மட்டத்திலிருந்து பதினோராயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் அமைந்திருக்கும் சிறிய அழகிய நகரம் லே. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்த லே நகரம், அன்றைய திபெத், காஷ்மீர், சீனா வர்த்தகப்பாதையில் முதன்மையான இடமாக இருந்தது. இன்று இந்திய ராணுவத்தின் வடக்கு எல்லையின் முக்கியத் தளங்கள் அமையப் பெற்றுள்ளன.

மற்ற மலை வாசஸ்தலங்களைப் போல, நகரின் மத்தியில் அகலமான சாலைகள், கடை வீதிகள் இருக்கின்றன. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஏன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சிறு விமான நிலையம் கூட உண்டு. பின்மதியம், மாலை வேளைகளில் அங்கே பலத்த காற்று வீசும் என்பதால், பெரும்பாலான விமானங்கள் காலையில்தான் இயக்கப்படுகின்றன.

நாங்கள் அன்று தங்கவிருந்த விடுதியைச் சென்றடைந்தபோது மாலை ஆறு மணி இருக்கும். வரவேற்பு பகுதியில் ஆப்பிள் மரங்களோடு, நான்கு அடுக்கு மாடிகள் கொண்ட சொகுசு விடுதி அது. நகரின் மையப் பகுதியிலேயே இருந்தது.

பயணக் களைப்பை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், லே நகரின் நைட் லைஃபை தவற விட்டுவிடுவோம் என, அறைக்குச் சென்றதும் குளித்து, வெளியே கிளம்பத் தயாரானோம். வரவேற்பறையில் நின்றிருந்த சஷாங்கிடம், சுவையான உணவு எங்கே கிடைக்கும் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு நானும் நவீனும் கிளம்பினோம்.

பயணம் தொடங்கிய நாளிலிருந்து, அன்றுதான் எந்தக் குளிர் உடுப்புகளும் இன்றி வெளியே வர முடிந்தது. தலைக்கவசம், குல்லா, கையுறைகள் என எதுவுமின்றி நாங்கள் வந்ததைக் கண்ட அணியினர்,

‘சாதாரண உடையில் உங்களைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்களும் தயாராகி வருகிறோம்’ என்றனர்.

சஷாங்க் சொல்லியிருந்த இடம் அருகிலேயே இருந்தது. நடந்து செல்லும் தொலைவுதான். மேகியையும், அலு பாரத்தாவையும் மாறி மாறி சாப்பிட்டுத் துவண்டு போயிருந்த நாவிற்கு இன்றைக்கு நல்ல விருந்து கிடைக்கப்போகிற உற்சாகம்.

அந்தக் கடையில் அவர்களது ‘பெஸ்ட் செல்லர்’ என்று என்னென்ன இருக்கிறதோ, அத்தனையையும் கொண்டுவரச் சொன்னோம். அது அந்தப் பகுதியில் பெயர்போன கடை போலும், வெளிநாட்டினர் அதிகம் பேர் இருந்தனர். மோமோ, துக்பா, வெண்ணெய் பிஸ்கட்டுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தன. லே நகர வீதிகளில் சுற்றிவிட்டு விடுதிக்குத் திரும்பினோம்.

Pangong Lake, Leh, India

எப்போதும் கிண்டலும், கேலியுமாகச் சிரித்துப் பேசும் சஷாங்கின் தொனி அன்றைய இரவு சந்திப்பின்போது கொஞ்சம் மாறியிருந்தது. காரணம் இல்லாமல் இல்லை.

அணியில், கர்நாடகாவிலிருந்து வந்திருந்த மூவர், பெங்களூருவிலிருந்தே சொந்த பைக்குகளை கொண்டுவந்திருந்தனர். அதில் சிவா, இமாலயன் ரக பைக்கையும், சித்தார்த், ஹோண்டா சிபிஆர் ரக பைக்கையும் வைத்திருந்தனர்.

பயணத்தின் போது, அணியினரின் வண்டிகளையும், மற்ற வாகனங்களையும் அவ்வப்போது முந்திச்செல்வதை அவர்கள் இருவரும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

மதிய உணவு இடைவெளியின் போது சஷாங்க் அவர்களிடம் தனியாகவே இதைப் பற்றிப் பேசியிருந்தார். இருப்பினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அன்றைய இரவு சந்திப்பு அதைப் பற்றியதாகத்தான் இருக்கப்போகிறது என்பதை அவர் பேசத் தொடங்கும்போதே உணர்ந்துகொண்டோம். இம்முறை கொஞ்சம் நேரடியாகவே பேசினார்.

‘நாளையிலிருந்து நம் பயணத்தின் அடுத்தக்கட்டம் தொடங்கவுள்ளது. இதுவரை இருந்ததைப் போல, அகலமான தார் சாலைகள் இனியிருக்காது. இனி வரும் நாள்களில் உங்கள் முதுகெலும்புகளின் பலம் சோதிக்கப்படும்.

பைக்கர்களாக நாம் சில ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். நம் பயணத் திட்டங்களுக்கு உட்படுவது அதில் முதன்மையானது. வேகமாக வண்டியைச் செலுத்துவதும், முந்திச்செல்வதும் நிச்சயம் சிலிர்ப்பை உண்டாக்கக்கூடியதுதான். அது எந்நேரமும் நமக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடலாம்.

இதனை மனத்தில் வைத்துக்கொண்டு ஓட்டுங்கள்’ என்றார்.

அதோடு, ஒவ்வொருவரது வண்டி ஓட்டும் பாணியில் தனக்குப் பிடித்தவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். சந்திப்பு முடிந்தும், நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் அனைவரும் அறைக்குச் சென்றோம்.

காலையில் எழுந்தபோது, முந்தைய நாளின் பயணக் களைப்பு எதுவுமில்லை. காரணம் இன்றைய எங்களது பயணத்தில் முதல் நிறுத்தம் கார்துங் லா. காலை எட்டரை மணியளவில் எல்லோரும் உணவருந்தும் இடத்திற்கு வரவேண்டும் என்பதுதான் திட்டம்.

நாங்கள் எட்டு மணிக்கெல்லாம் முழு லேயேர் ஆடைகளுடன் தயாராகிவிட்டோம். அறைக்கு வெளியேயும், பால்கனியிலும் யாருமே இல்லை. சரி, சாப்பிட்டுவிடலாம் என்று டைனிங் ஹாலுக்கு போனால், அங்கு பாத்திரங்கள் எல்லாம் துடைத்து வைத்தது போலச் சுத்தமாக இருந்தன. இன்னும் உணவு தயாராகியிருக்கவில்லை. ஆர்வக்கோளாரில் முன்னதாகவே வந்துவிட்டோம் எனப் புரிந்தது. கொஞ்சம் பொறுத்துப்பார்த்துவிட்டு சஷாங்கின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசினோம். பத்து நிமிடங்களில் கீழே வருவதாகச் சொன்னார்.

நாங்கள் விடுதிக்கு வெளியே சிறிது தூரம் உலாவச்சென்றோம். சாலைகள், தெருக்களெல்லாம் காலியாகக் கிடந்தன. குளிர் பிரதேசங்களில் காலை என்பது ஒன்பது மணிக்கு மேல்தான் என்பதை ஏனோ நாங்கள் மறந்துவிட்டோம். நானும் நவீனும் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு எங்களது பைகளை எடுத்துவந்து காத்திருந்தோம்.

அப்போதுதான் மற்றவர்கள் ஆறஅமர உண்ணும் இடத்திற்கு வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். கொஞ்சம் கடுப்பாக நாங்கள் ஹோட்டல் வரவேற்பறைக்கு முன் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கேப்டன்,

‘தினமும் முதல் ஆளாகத் தயாராகிவிட்டு இப்படிக் காத்திருப்பது எரிச்சலாக உள்ளதா’ என்று கேட்டார். நான், ‘ஆம்’ எனப் புன்னகைத்தேன்.

‘நீங்கள் தினமும் சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறீர்கள், மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதில்லையா. பலர் இணைந்து பயணம் மேற்கொள்ளும்போது இது இயல்புதான்.

உண்மையில், இன்றைக்குப் பத்து மணிக்குக் கிளம்பினால் போதுமானது. எட்டரை என்று சொன்னால்தான் ஒன்பதரை மணிக்குள் அனைவரும் வந்து சேர்வார்கள்’ என, கண் சிமிட்டி சிரித்தார்.

‘கேப்டனின் சாமர்த்தியத்திற்குப் பலியாடு நாங்களா’ எனக் கோபித்துக்கொண்டோம்.

எங்களைச் சமாதானப்படுத்தும் விதமாக அவர் மேலும் எங்களுக்கு அருகில் வந்து நவீனின் தோளில் கைபோட்டுக்கொண்டு பேசினார்,

‘அப்படியெல்லாம் இல்லை, இன்றைக்கு நீங்கள் சீக்கிரம் வந்ததால், காலை நேர லே நகர அனுபவத்தைப் பெற முடிந்ததுதானே, பிறருக்கு அது வாய்க்கவில்லை. அவ்வகையில் உங்களுக்கு லாபம் அதிகம்’ என்றார்.

அவர் சொன்னதைப் போல நாங்கள் அன்றைய பயணத்தைத் தொடங்கும்போது மணி 9. 30.

Thiksey Monastery Leh Ladakh

கார்துங் லா. சென்ற ஆண்டு வரை இதுதான் உலகத்தின் உயரமான மோட்டார் வாகனங்கள் செல்லும் சாலையாக இருந்தது. இப்போது உமிங் லா (19, 024 அடி உயரம்) பகுதியில் சாலையை அமைத்து புதிய உலக சாதனையை BRO (எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு) பதிவுசெய்திருக்கிறது.

கார்துங் லாவின் ‘Top of the World’ பலகை உலகப்பிரசித்தி பெற்றது. பைக்கர்கள் அங்குப் புகைப்படம் எடுத்துக்கொள்வதைப் பெரும் லட்சியமாகவே வைத்திருப்பார்கள். அங்கு செல்லாமல் லடாக் பயணம் முழுமை பெறாது. லேவில் இருந்து கிளம்பியதும், முதல் இருபது நிமிடங்கள் கேப்டனின் பைக்கிற்கு பின்தான் எங்களது பைக் இருந்தது.

வழக்கத்தை விட எங்கள் அணியினர் உற்சாகமாக இருந்தனர். லே நகரைத் தாண்டும் வரையில் சாலையில் வாகன நெரிசல் இருந்தது. அதை மெல்லக் கடந்து கார்துங் லா செல்லும் பாதையை வந்தடைந்தோம்.

‘உலகத்தின் மிக உயரிய மோட்டார் வாகனம் செல்லும் பாதை இங்கிருந்து தொடங்குகின்றது’ என்ற பலகையைப் பார்த்தோம். ஏராளமானோர் அங்கே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். எங்கள் பெர்மிட் அனுமதிகள் எல்லாம் பெற்றுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

மலைப்பாதை வளைவுகளில் ஏறிக் கொண்டிருந்தபோது ஓரிடத்தில் பைக்குகள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தன.

சிறிது முன்னேறிச் சென்றதும் தெரிந்தது, இராணுவ வாகனங்கள் எதிர்புறம் வரிசையாக வந்து கொண்டிருந்தனவென்று. ஓரிரண்டு வாகனங்கள் அல்ல, முப்பது நாற்பது மிலிட்டரி டிரக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக எங்களைக் கடந்து சென்றன.

ராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் போக்குவரத்து வாகனங்கள். அவர்களுக்கான ரேஷன் பொருள்களையும் சிலவற்றில் எடுத்துச் சொன்றுகொண்டிருந்தனர்.

ஒவ்வொரு டிரக்கும் எங்களைக் கடந்து செல்லலும் போது, ராணுவத்தினரைப் பார்த்த உற்சாகத்தில் நாங்கள் அவர்களுக்கு சல்யூட் செய்தோம். அதை அவர்களும் அங்கீகரித்தனர். அத்தனை ராணுவ வாகனங்களை நாங்கள் ஒன்றாகப் பார்த்தது அதுவே முதல் முறை.

ராணுவ வாகனங்கள் கடந்ததும், எங்கள் பயணம் தொடர்ந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம், பாதை மேடாகிக்கொண்டே போனது. 450 சிசி திறன் கொண்ட இமாலயன் மோட்டார் பைக் கூட திணற ஆரம்பித்தது. முழு பலத்துடன் முறுக்கியும், உறுமிக்கொண்டே போனதே தவிர வேகம் கூடவில்லை.

Diskit, Leh Ladakh

கார்துங் லா பாய்ன்டுக்கு ஒரு கிலோமீட்டர் முன்பே பனி போர்த்திய மலைத் தொடர்கள் கண்ணில்பட்டன. கார்ந்துங் லாவில் பனிப் பொழிவு இருந்தது. நாங்கள் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து அன்றுதான் பனிப்பொழிவைக் கண்டோம். கார்ந்துங் லா பெயர்ப் பலகை முன்பு பெருங்கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.

முட்டிமோதித்தான் புகைப்படங்கள் எடுக்கமுடிந்தது. குழுவினரும் அருகிலிருந்த குன்றின் மீது ஏறி நின்று படமெடுத்துக்கொண்டிருந்தனர். நாங்கள் மட்டும் சமர்த்துப் பிள்ளைகளாக சஷாங்க் அருகில் வந்து நின்று கொண்டோம். அன்றைய தினம் அவருடன் அதிக நேரம் செலவிட முடிந்தது.

‘இங்கே காஹ்வா நலலாயிருக்கும் வாங்க போலாம், இன்னிக்கு என்னோட ட்ரீட்.’ என எங்களை அருகிலிருந்த மிலிட்டரி கேன்டீனுக்கு அழைத்துச் சென்றார். பாதாம், பச்சைத் தேயிலை, அதோடு ஏலக்காய், குங்குமப்பூ, லவங்கப்பட்டை போன்ற நறுமணப்பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் பானம் காஷ்மீரி கஹ்வா.

அங்கிருந்து நாங்கள் வெளியே வருவதற்கும் பனிப்பொழிவு அதிகமாவதற்கும் சரியாக இருந்தது. ‘பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே தங்கவேண்டாம்’ என பலகைகள் வைத்திருந்தார்கள். ஆனால் அப்பகுதியில் எப்போதுமே சுற்றுலாப் பயணிகள் நிறைந்தே காணப்படுவர். பைக்கர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் அங்கே நடமாடிக்கொண்டிருந்தனர். கடும் பனிக்காலத்தில் மட்டும் கூட்டம் இருக்காது.

முக்கால் மணி நேரத்திற்கு மேலான காத்திருப்பிற்கு பிறகும், பனிப் பொழிவு நிற்பதாகத் தெரியவில்லை. நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு ஆயத்தமானோம். சாலைகள் ஈரமாக இருப்பதனால், கவனத்துடன் வண்டியைச் செலுத்துங்கள் என்ற அறிவுரை மட்டும் கேப்டனிடம் இருந்து வந்தது.

நாங்கள் மலையிறங்க தொடங்கிய சில நிமிடங்களில், மழை தீவிரமடைந்தது. அதற்கு மேல் பயணத்தைத் தொடர முடியாது என்கிற நிலை.

எதிர்ப்பட்ட தேநீர்க் கடையொன்றில் பைக்குகளை நிறுத்திவிட்டு, மழையின் வேகம் குறையும் வரை அங்கே இருப்பது என முடிவெடுத்தோம். அந்தக் கடையில் ஏற்கெனவே கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வழியே சென்ற பெரும்பாலானோர் அங்கேதான் ஒதுங்கியிருந்தனர். நிற்பதற்குக் கூட இடமில்லாத அந்த இடத்தில், தமிழ் உட்படப் பல மொழி பேசும் மக்களைக் காண முடிந்தது. வெளிநாட்டவர்களும் இருந்தனர்.

மழை நின்றதும் அங்கிருந்து கிளம்பினோம். மலையிறக்கம் என்பதனால், இயல்பாகவே பைக்குகள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன. சித்தார்த் அன்றும் தன் வேலையைத் தொடங்கியிருந்தார். புறப்படும் போது எங்களுக்கு இரண்டு வண்டிகள் பின்னாலிருந்த சித்தார்த், வேகமெடுத்து எங்களை முந்திச் சென்றார்.

அடுத்த சில நொடிகளில் அதற்கு முன்பு இருந்த வண்டியையும் ஓவர் டேக் செய்தார். அப்போதே எங்களுக்கு முன்னும் பின்னும் இருந்தவர்கள் இது தவறு என்கிற செய்கையைச் செய்தனர்.

எதையுமே கண்டுகொள்ளாத சித்தார்த், மீண்டும் தனக்கு முன்னாலிருந்த வண்டியை முந்தி செல்ல முயன்ற போது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே, அவரது பைக் பக்கவாட்டில் இருந்த மலையில் சென்று மோதியது. பாறையில் மோதிய வேகத்தில் சில அடிகள் தூக்கிவீசப்பட்டு விழுந்தார்.

நொடிப்பொழுதில் இவையனைத்தும் எங்கள் கண்முன்னே நடந்து முடிந்திருந்தது. முன் சென்று கொண்டிருந்த சஷாங்குக்கும் இதர குழுவினருக்கு இதைத் தெரியப்படுத்த, தொடர்ந்து பைக் ஹார்ன் ஒலியை எழுப்பினோம்.

அதைக் கேட்டதும், அவர்கள் சுதாரித்துத் திரும்பினர். அதற்குள் அருண், மனிஷ் உள்ளிட்டோர் வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓடிச் சென்று சித்தார்த்தை தூக்கிவிட்டனர்.

பைக்கின் ஒரு பகுதி முற்றிலும் சேதமாகியிருந்தது. சித்தார்த்துக்கு இடது கையில் பலத்த அடி, கால்களில் காயம். தலைக் கவசம் அணிந்திருந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

எங்களுடன் வந்த டெம்போ டிராவலருக்கு காயம் பட்டவரை இருவர் கைதாங்கலாக அழைத்துச் சென்றனர். அங்கே வைத்து அவரை சஷாங்க் பரிசோதித்தார். பாறையில் மோதி அங்கிருந்த குழியில் விழுந்திருந்த பைக்கை மற்றவர்கள் தூக்கினர்.

ரத்தக் காயங்களுடன் அமர்ந்திருந்த சித்தார்த்துக்கு இடது கையில் வலி அதிகமாக இருந்தது. கைகளில் இருந்த வீக்கத்தைப் பார்த்ததும், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிந்து கொண்டோம்.

அங்கேயே முதலுதவியும் வழங்கப்பட்டது. மேற்கொண்டு சிகிச்சைக்காக உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

ஒருங்கிணைப்பாளர் பார்த், கேப்டன் இருவரும் சில நிமிடங்கள் கலந்து பேசி, அன்றைய நாளுக்கான திட்டத்தை எங்களுக்கு விளக்கினார்கள்.

காயம் அடைந்த சித்தார்த்துடன் சஷாங்க் செல்வதும், மற்றவர்கள் எங்களது அன்றைய தங்குமிடமான நுப்ரா பள்ளத்தாக்கை அடைவதும்தான் திட்டம். பார்த் அணியினரை வழிநடத்திச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.

சேதமடைந்த பைக்கையும் வேனில் ஏற்றிக்கொண்டு, சஷாங்க், சித்தார்த் அவரது நண்பர் சிவா மூவரும், லே நகருக்குக் கிளம்பிச்செல்வதைக் கலக்கத்தோடு நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.

 (தொடரும்)

ராஜ்ஸ்ரீ செல்வராஜ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest