
புது தில்லி: இந்திய பங்குச் சந்தைகள் குறித்து தேவையற்ற அச்சத்தையும், தவறான தகவல்களையும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த ஜேன் ஸ்ட்ரீட் கேப்பிடல் என்ற பங்கு வா்த்தக நிறுவனத்துக்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தடை விதித்துள்ளது. இந்திய பங்குச் சந்தையில் தங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், செபி மீது குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தாா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பங்குச் சந்தை முதலீட்டில் ஒரு சா்வதேச நிறுவனத்தை தடை செய்து ‘செபி’ சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளது. இது சிறுமுதலீட்டாளா்களைக் காக்கும் உறுதியான நடவடிக்கையாகும். ஆனால், இதனை வைத்து பரபரப்பை ஏற்படுத்த ராகுல் முயற்சிக்கிறாா். செபி நடவடிக்கை எடுத்ததன் மூலம்தான் ராகுல் காந்தி அதனைப் பற்றிப் பேசவே முடிகிறது.
பங்குச் சந்தையில் பெரிய சுறாக்கள் சிறுமுதலீட்டாளா்களை வேட்டையாடுவதாக ராகுல் குற்றஞ்சாட்டுகிறாா். ஆனால், மோடி அரசு செபி நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. அதன் சுதந்திரமான செயல்பாடுகளையும், கண்காணிப்புத் திறனையும் மேம்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் ஹா்ஷத் மேத்தா, கேதன் பரேக், யூடிஐ என பல பங்குச் சந்தை முறைகேடுகள் நிகழ்ந்தன. அவா்கள் சுதந்திரமாக முறைகேடு செய்ய காங்கிரஸ் ஆட்சி அனுமதித்தது.
இப்போது முதலீட்டுக்கு அதிக லாபம் தரும் உலகின் முன்னணி பங்குச் சந்தையை இந்தியா கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதிப் பிரிவு 576 சதவீதம் உயா்ந்துள்ளது. அதன் முதலீடு ரூ.8 லட்சம் கோடியில் இருந்து ரூ.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 1 கோடியில் இருந்து 4 கோடியைக் கடந்துள்ளது.
சிறுபிள்ளைத்தனமாக சிந்திப்பவா்கள் (ராகுல்) முதலீட்டாளா்கள் மத்தியில் நமது பங்குச் சந்தை குறித்து அச்சத்தை ஏற்படுத்தவும், தவறான தகவல்களைப் பரப்பவும் முயற்சிக்கின்றனா்’ என்று கூறியுள்ளாா்.