istockphoto_917333680_612x612

பாலியல் வன்முறைகளில் சிறுவர்கள் ஈடுபடுவது; உடன் படிக்கும் மாணவிகளை சக மாணவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வது என செய்திகள் நீளுவதால், இந்த வார காமத்துக்கு மரியாதையில், இந்தவகை ஆண்களின் தவறான இயல்பை சிறுவயதிலேயே கண்டறிய முடியுமா என சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் அவர்களிடம் கேட்டோம்.

”விளையும் பயிர் சமூகத்துக்கு எதிராக இருக்குமா என்பதை சிறுவயதிலேயே கண்டுபிடித்துவிட ஒரளவு முடியும். இந்த விஷயத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒரு சிறுவன் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிற்காலத்தில் நார்மலாக இருப்பானா, அப்நார்மலாக இருப்பானா, ஆபத்தானவனாக இருப்பானா என்பதை பெரும்பாலும் கண்டறிந்துவிடலாம். இந்த நார்மல், அப்நார்மல், ஆபத்து ஆகியவற்றை மருத்துவர்கள் நாங்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு என பிரித்திருக்கிறோம்.

இந்த வகையின் கீழ் வருகிற சிறுவர்கள் பாலியல் விஷயங்களில் அந்தந்த வயதுக்கு ஏற்றபடி ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது இயல்பான ஒன்றுதான். நீங்கள் கொஞ்சம் பேச்சை மாற்றினால் மறந்து விடுவார்கள். ஆனால், இந்தக் காலத்தில் எல்லா கேள்விகளுக்குமே செல்போனும் செயற்கை நுண்ணறிவும் பதிலளித்து விடும் என்பதால், சிறுவர்கள் அதில் தேட ஆரம்பிக்கலாம். அதனால், நாப்கினில் ஆரம்பித்து காதல், கர்ப்பம் என ஒரு சிறுவன் எதைப்பற்றிப் பேசினாலும், அதற்கு பொருத்தமான, எளிமையான, முடிந்தால் அறிவியல்பூர்வமான பதில்களை சொல்லுங்கள். அவர்களுடைய பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு பெற்றோரிடம் அல்லது ஆசிரியரிடம் கிடைத்துவிட்டால், ‘பச்சை’ நிறத்தின் கீழ் வருகிற சிறுவர்கள் அதை செல்போனிலோ, நண்பர்களிடமோ தேட மாட்டார்கள்.

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு பெரியவர்கள் பதிலளிக்கவில்லையென்றால், சிறுவர்கள் அதை தவறான இடத்தில் தெரிந்துகொண்டு விடுவார்கள்.

Boys ( Green, Yellow, Red)
Boys ( Green, Yellow, Red)

இந்த வகையின் கீழ் வருகிற சிறுவர்களும் பாலியல் விஷயங்களில் அந்தந்த வயதுக்கு ஏற்றபடியான ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால், ‘பச்சை’ நிறத்தின் கீழ் வருகிற சிறுவர்களைப்போல இவர்களிடம் பேச்சை மாற்ற முடியாது. கொஞ்சம் பிடிவாதமாக தங்கள் கேள்வியை முன் வைப்பார்கள். ஸோ, இவர்களுடைய கேள்விகளுக்கு அவர்களுடைய வயதுக்கு ஏற்றபடி பதிலளிப்பதோடு, இவர்களின் மேல் ஒரு கண்ணை வைத்திருப்பது நல்லது. தவிர, பெண்களிடம் பேசுவதில், பழகுவதில் எது சரி, எது தவறு என்பதை அழுத்தம்திருத்தமாக சொல்லித்தர வேண்டும்.

இது ஆபத்தான வகை. சமீபத்தில் மேற்கு வங்கத்தில், ஒரு மருத்துவக்கல்லூரியில் ஜூனியர் மாணவியை சீனியர் மாணவர் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இவர் சிறுவனாக இருக்கையில் சிவப்பு வகையைச் சேர்ந்தவராகத்தான் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இந்த வகையைச் சேர்ந்த ஆண் பிள்ளைகள் ஒரு பெரிய குற்றத்தை செய்வதற்கு முன்னால், அவர்களுடைய நடவடிக்கைகளில் சில ரெட் சிக்னல்களை கட்டாயம் காட்டியிருப்பார்கள்.

உதாரணத்துக்கு, பெண்களைப்பற்றிய ஆபாசமான பேச்சு, ஆபாச வீடியோ பார்ப்பது, பெண்களைப் பார்க்கும் விதம், அவர்கள் அறியாமல் வீடியோ எடுப்பது, ஏன்… வீட்டைச்சுற்றி இருக்கிற விலங்குகளிடம் பாலியல்ரீதியான வக்கிரமான செயல்களில் ஈடுபடுவது என ஏதோவொரு வகையில், பாலியல் விஷயத்தில் தாங்கள் சிவப்பு நிற இயல்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

டாக்டர் காமராஜ்.
டாக்டர் காமராஜ்.

ஒருகட்டத்தில், தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பாலியல் ரீதியில் ஏதாவது துன்பங்களைக் கொடுத்திருப்பார்கள். இவர்களுக்கு கவுன்சிலிங், பிஹேவியர் தெரபி, தேவைப்பட்டால் சிறிய அளவிலான தண்டனைகூட கொடுக்க வேண்டியிருக்கும். சிவப்பு நிற இயல்புடன் போதை மருந்தும் பயன்பாடும் சேர்ந்துகொண்டால், இவர்கள் எப்படிப்பட்ட குற்றத்தை செய்யவும் தயங்க மாட்டார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த நிறத்தின் கீழ் வருகிற சிறுவர்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், அவர்கள் பிற்காலத்தில் குற்றவாளிகளாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

மஞ்சள் மற்றும் சிவப்பு இயல்புகொண்ட ஆண் பிள்ளைகளை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், இந்த வகைகளைச் சேர்ந்த பிள்ளைங்கள் தங்கள் எதிர்காலத்தை அழித்துக்கொள்வதோடு, இன்னொரு பெண் குழந்தையின் வாழ்க்கையையும் அழித்து விடுவார்கள். இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் மிக மிக முக்கியம். பிரச்னை நடந்த பிறகு வருந்துவதும், தங்கள் நிறுவனத்துக்கு கெட்டபெயர் வராமல் தடுப்பதற்கு போராடுவதையும்விட வருமுன் தடுப்பது சுலபம்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest