தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் பகுதியில் உள்ள தென்னைத் தோப்பு ஒன்றில் பணம் வைத்து ரம்மி சூதாட்டம் நடப்பதாக ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆறு பேரைக் கொண்ட கும்பலை பிடித்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்து ரூ.3.27 லட்சம் பணம், மூன்று சொகுசு கார்கள், ஆறு செல்போன்களை பறிமுதல் செய்து, சூதாடிய ஆறு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

ஒரத்தநாடு

இதில், திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவரான அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தனபால் (64), ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சசிகுமார் (48), தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்தவரான அதிமுக இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ் (53), திருமங்கலக்கோட்டை மேலையூரை சேர்ந்த வேலாயுதம் (60), துலுக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (56), கண்ணந்தன்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் (51) ஆகியோர் என்பதும், இவர்கள் சேர்ந்து தொடர்ந்து சூதாடி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து ஆறு பேர்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஒரு மாதம் தினமும் காலையில் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டு, ஜாமினில் விடுவித்தார்.

இதையடுத்து அதிமுகவினர் ஸ்டேஷன் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோர்ட் உத்தரவு
நீதிபதி உத்தரவு

ஒரத்தநாட்டை சேர்ந்த அதிமுக முக்கியப் புள்ளி ஒருவர் போலீசாரிடம் “இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள்” என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் போலீசார் இதில் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒரத்தநாடு பகுதியில் தென்னைத் தோப்பில் கும்பலாக சேர்ந்து மது அருந்திக் கொண்டு சீட்டு விளையாடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்றவை தொடர்ந்து நடக்கின்றன.

சீட்டு விளையாடிய கும்பலை போலீசார் கைது செய்தது போல இதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest