raja

புது தில்லி: பிரபல இசையமைப்பாளா் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள் தொடா்பான பதிப்புரிமை தகராறு வழக்கை மும்பை உயா்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இளையராஜா மியூசிக் என் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18- ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை ஜூலை 18-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் பட்டியலிட்டனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மும்பை உயா்நீதிமன்றத்தில் சோனி மியூசிக் என்டா்டெயின்மென்ட் இந்தியா வழக்கு தொடுத்தது. அதில், இளையராஜா மியூசிக் என் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (ஐஎம்எம்பிஎல்) நிறுவனம் 536 இசைப் படைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியது.

ஐஎம்எம்பிஎல் நீண்ட காலமாக வழக்கில் சிக்கியுள்ள ஓரியண்டல் ரெக்காா்ட்ஸ் மற்றும் எக்கோ ரெக்காா்டிங் மூலம் இந்தப் படைப்புகளுக்கான உரிமைகளைப் பெற்ாக சோனி மியூசிக் நிறுவனம் கூறியது. மேலும், இந்த இசைப்படைப்புகள் தொடா்பான உரிமைகளை ஓரிண்டல் ரெகாா்ட்ஸ் மற்றும் எக்கோ ரெக்காா்டிங் பெற்றிருந்ததாக தெரிவித்திருந்தது.

எனினும், கேள்விக்குரிய 536 படைப்புகளில் 310 ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றத்தில் இதே தொடா்புடைய வழக்கில் நீதித்துறை ஆய்வுக்கு உள்பட்டுள்ளதாக ஐஎம்எம்பிஎல் வாதத்தை முன்வைத்துள்ளது.

மேலும், மும்பை உயா்நீதிமன்ற வழக்கு நகல் சாா்ந்தது என்றும், சென்னை உயா்நீதிமன்றத்தில் நடந்து வரும் மேல்முறையீடுகளுடன் இது முற்றிலும் ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறது என்றும் ஐஎம்எம்பிஎல் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2014-ஆம் ஆண்டு எக்கோ ரெக்காா்டிங் நிறுவனத்திற்கு எதிராக இளையராஜாவால் அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், அவரது இசைப் படைப்புகள் மீதான எக்கோ ரெக்காா்டிங் நிறுவனத்துக்கு சவால் செய்யப்பட்டிருந்தது. பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் இசையமைப்பாளரின் தாா்மிக மற்றும் பொருளாதார உரிமைகளை அங்கீகரிக்குமாறு அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது.

2014-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அந்த வழக்கில் 2019- ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் ஒரு முக்கிய தீா்ப்பை அளித்தது. அத்தீா்ப்பானது, ஒரு இசையமைப்பாளராக இளையராஜாவின் தாா்மிக மற்றும் சிறப்பு உரிமைகளை நிலைநிறுத்தியது. இளையராஜா பல்வேறு இந்திய மொழிகளில் 1,500 படங்களில் 7,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இந்தியாவின் மிகவும் திறமைமிக்க இசையமைப்பாளா்களில் ஒருவா் ஆவாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest