
சந்துருவின் (ராஜு ஜெயமோகன்) தாயார் லலிதா (சரண்யா பொன்வண்ணன்), மதுமிதாவின் (ஆதியா) தாயார் உமா (தேவதர்ஷினி) ஆகிய இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களை அறியாமலே காதல் செய்து ‘அரேஞ்ச்டு லவ் மேரேஜ்’ செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஒரு சூழலில் பக்கத்து வீட்டிலேயே குடியேறியும் விடுகிறது உமாவின் குடும்பம். இந்நிலையில் கல்லூரி செல்லும் சந்துரு (ராஜு ஜெயமோகன்) தனது உயிர் நண்பனான சரவணன் (மைக்கேல்) ஒருதலையாகக் காதலிக்கும் நந்தினியை (பாவ்யா) காதலிக்கிறார். சந்துருவுக்கு சரவணனின் காதல் விவகாரம் தெரியாது.

அதேபோல் மதுமிதா, ஆகாஷ் (பப்பு) என்பவரைக் காதலிக்கிறார். இந்தக் களேபரங்களுக்கு இடையே 2k, கிரிஞ்ச், பூமர் போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே தடவி, பன்னைத் திருப்பினால் ‘பன் பட்டர் ஜாம்’ ரெடி!
நகைச்சுவைக்கான உடல் மொழி, ஆங்காங்கே போடும் ஒன்லைனர்கள், எமோஷனல் காட்சிகளில் அழுத்தம் என நாயகனாக நல்ல அறிமுகம் தந்திருக்கிறார் ராஜு ஜெயமோகன். இருப்பினும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் செயற்கைத்தனங்களை இன்னும் குறைக்க வேண்டும். இன்ஃப்ளூயன்ஸராக வரும் பாவ்யா நடிப்பு எந்த இன்ஃப்ளூயன்ஸையும் ஏற்படுத்தவில்லை.
துணை நாயகர்களாக வரும் பப்பு, மைக்கேல் இருவரின் கதாபாத்திர வளைவுகளும் முழுமையில்லாமல் இருப்பது படத்தின் பெரிய மைனஸ்! இருவரும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கப் போராடுகிறார்கள். அனுபவ நடிகர்களான சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி மிகையான நடிப்பையே அள்ளித் தெளித்திருக்கின்றனர்.
சார்லி சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு ஓரமாக உட்கார்ந்திருக்கிறார், அவ்வளவே! கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மகனுக்கு அவர் சொல்லும் ‘சிகரெட்’ அறிவுரைகள் எல்லாம் நம் கையையே சுடுகின்றன. கேமியோ அட்டென்டன்ஸ் போடும் விக்ராந்துக்கு பில்டப் கொஞ்சம் ஓவர்டோஸ்!

வண்ணமயமான ஒளியமைப்பு, மழைக் காட்சிகள் ஆகியவற்றைப் படம்பிடித்த விதத்தில் ஒளிப்பதிவாளர் பாபுகுமார் படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கிறார். இருப்பினும் கல்யாண வீடு என்கிற பரந்த இடத்தில் ஆரம்பிக்கும் முதல் காட்சியில், குறுகிய இடத்தில் வைக்கப்பட்ட ஃப்ரேம், பேஸ்கட்பால் கிரவுண்டில் கேலரியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு வைக்கப்பட்ட வைடு ஷாட் எனக் காட்சிக் கோணங்களில் சற்றே நெருடல்!
படத்தில் எக்கச்சக்க ஃபில்லர்களைக் கத்தரிக்காமல் அப்படியே விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரஹாம்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையில் பாடல்கள் பெரிதாக வேலை செய்யவில்லை. பின்னணி இசை ஓரளவுக்குப் படத்தின் மீட்டருக்குப் பொருந்திப் போகிறது.
வார்த்தைகளில் மட்டுமே ‘ட்ரெண்டிங்’ வைத்துக்கொண்டு, அதே பழைய காதல் கதையைத்தான் படம் முழுக்க அரைத்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பைப் போட்டு ஆரம்பிக்கும் இடத்திலேயே, இப்படி ஒரு ‘பன் பட்டர் ஜாம்’ கடையைப் பார்த்ததே இல்லையே என்கிற பிளாஸ்டிக் தன்மை ஒட்டிக்கொள்கிறது.
இரு உயிர் நண்பர்களுக்கான காட்சியை தன்பாலின ஈர்ப்பாகச் சித்திரிக்கும் ‘நகைச்சுவை’ எல்லாம் 80’ஸ் கிட்ஸ் சிந்தனை! இதில் 2கே கிட்ஸ் ட்ரெண்டிங் என்று பேசுவதெல்லாம் உச்சபட்ச நகைமுரண்.

பத்து காமெடிகளில் ஒன்று சிரிக்க வைத்தாலும், மீதி ஒன்பதைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமே என்ற அயர்ச்சியே மிஞ்சுகிறது. காமெடி காட்சிகளாக வைக்கப்பட்ட மகாலட்சுமி, டிஷ்யூ பேப்பரை வைத்து வரும் ‘ஏ’ காமெடிகள் எல்லாம் ‘சிரிச்சா போச்சு’ போட்டியில் நம்மை வெற்றியாளர்களாக்குகின்றன.
இடைவேளைப் புள்ளியில் நாயகன் தன்னுடைய காதலியுடன் இருக்கிறார், நாயகி தன்னுடைய காதலனுடன் இருக்கிறார், இதற்கு எதற்கு நாயகனின் காதில் புகைச்சல் என்பதும் விளங்கவில்லை.
ஹீரோவை ‘மோட்டிவேட்’ செய்ய கேமியோ நாயகன் விக்ராந்த், வசனங்கள் பேசுவது கூட ஓகே! இரண்டு தாய்மார்களையும் படம் முழுக்க ‘பைத்தியம்’ என்று திட்டும் வசனங்களை வைத்திருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.

அந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பைப் படம் முழுக்க எரிச்சல் தருவதாக எழுதிவிட்டு, இறுதியில் நல்லவர்களாக ‘இந்தத் தலைமுறையையே புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று ஆதங்கப்படுவதாக வைத்த இடம், “ஒரே கன்ஃப்யூஷன்” என்று நம்மையும் புலம்ப வைத்திருக்கிறது.
குழப்பமான திரைக்கதை, துணை நடிகர்களின் அதீத நடிப்பு, சொற்பமான காமெடி என்று உருவாகியிருக்கும் இந்த ‘பன் பட்டர் ஜாமை’ நம்மால் ரசித்து ருசிக்க முடியவில்லை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…