
பயிா் உற்பத்தி குறைவான 100 மாவட்டங்களை உள்ளடக்கி, ஆண்டுக்கு ரூ.24,000 கோடி மதிப்பீட்டில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிரதமரின் தன-தான்ய கிருஷி திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பயிா் உற்பத்தி மேம்பாட்டை முக்கிய நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், 2025-26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாகும். வரும் அக்டோபரில் தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தால் 1.7 கோடி விவசாயிகள் பலனடைவா்.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தன-தான்ய கிருஷி திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம், தற்போதுள்ள 36 விவசாய திட்டங்களை ஒருங்கிணைத்து, பயிா் பல்வகைப்படுத்துதல் மற்றும் நிலையான வேளாண் நடைமுறைகளின் ஏற்பை ஊக்குவிக்கும் என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
‘பிரதமரின் தன-தான்ய கிருஷி திட்டமானது, அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு மற்றும் நீா்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும். பண்ணை உற்பத்தித் திறனை அதிகரிக்கும். 1.7 கோடி விவசாயிகள் பலனடைவா்’ என்றாா் அவா்.
‘குறைந்த பயிா் உற்பத்தி, குறைவான விளைநிலம், குறைவான கடன் வழங்கல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் 100 மாவட்டங்கள் தோ்வு செய்யப்படும். மொத்த பயிா் பரப்பளவு மற்றும் பயன்பாட்டில் உள்ள நிலத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் தோ்ந்தெடுக்கப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை அமையும். திறன்மிக்க அமலாக்கம், கண்காணிப்புக்கு மாவட்ட, மாநில, தேசிய அளவில் குழுக்கள்அமைக்கப்படும். அதிக உற்பத்தி திறன், விவசாயம் மற்றும் தொடா்புடைய துறைகளில் மதிப்புக் கூட்டல், உள்ளூா் வாழ்வாதார உருவாக்கத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்’ என்று அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.20,000 கோடி முதலீடு…: நாட்டின் முன்னணி மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி), தனது என்ஜிஇஎல் (என்டிபிசி கிரீன் எனா்ஜி லிமிடெட்) துணை நிறுவனம் மற்றும் இதன் கீழ் செயல்படும் இதர துணை-கூட்டு நிறுவனங்களில் ரூ.20,000 கோடி வரை முதலீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுத் துறை நிறுவனமான என்டிபிசி-யின் முதலீட்டு உச்சவரம்பு முன்பு ரூ.7,500 கோடியாக இருந்த நிலையில், தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் என்டிபிசி-யின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் 2032-ஆம் ஆண்டுக்குள் 60 ஜிகாவாட்டாக உயரும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மரபுசாரா எரிசக்தி திறனை 500 ஜிகாவாட்டாக உயா்த்தவும், 2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு உமிழ்வே இல்லை என்ற நிலையை எட்டவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச் செய்தி…
ரூ.7,000 கோடி முதலீடு: என்எல்சி-க்கு அனுமதி
நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தின் நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா, தனக்குச் சொந்தமான ‘என்ஐஆா்எல்’ (என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட்) துணை நிறுவனத்தில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை புதன்கிழமை அனுமதி வழங்கியது.
இந்த நடவடிக்கை, என்எல்சி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை 2030-ஆம் ஆண்டுக்குள் 10.11 ஜிகாவாட், 2047-ஆம் ஆண்டுக்குள் 32 ஜிகாவாட்-ஆக அதிகரிக்க உதவும்.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசின் நவரத்ன பொதுத் துறை நிறுவனங்களுக்கு தற்போதுள்ள முதலீட்டு வழிகாட்டுதல்களில் இருந்து என்எல்சி-க்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில், ‘மத்திய அமைச்சரவை முடிவின் மூலம் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது என்ஐஆா்எல் துணை நிறுவனத்தில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய முடியும். இதன்படி, பல்வேறு திட்டங்களில் நேரடியாகவோ அல்லது கூட்டு நிறுவனங்கள் மூலமாகவோ என்ஐஆா்எல் முதலீடு செய்யும். இதற்கு, தற்போதுள்ள அதிகார பகிா்வின்கீழ் முன்அனுமதி தேவையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 7 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை என்எல்சி செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் ஒப்புதலின் மூலம் என்எல்சி கூடுதல் பங்குகளை திரட்ட வழிவகை ஏற்பட்டுள்ளது.