
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினமான நேற்று காலை முதல் அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல்சேகரனின் நினைவிடத்தில் அவரது வாரிசுகள் மற்றும் இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செவ்வூரை சேர்ந்த மக்கள் நேற்று காலை முதலாவதாக அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, நவாஸ்கனி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், தமிழரசி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலும், நாம் தமிழர் கட்சியினர் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலும் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களையும் விழா ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி மூலம் பெயர் சொல்லி வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, மணிகண்டன், கட்சி நிர்வாகிகள் எம்.ஏ.முனியசாமி, நிறைகுளத்தான், சதன் பிரபாகர் உள்ளிட்டோர் ஏராளமான தொண்டர்களுடன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது அதிமுக-வினரின் பெயரை விழா குழுவினர் ஒலிபெருக்கியில் கூறாமல் தவிர்த்தனர். இதையடுத்து விழா குழுவினரிடம் அதிமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதன் பின் அதிமுக-வினர் பெயரை ஒலிபெருக்கியில் கூறினர். இதனை தொடர்ந்து அதிமுக-வினர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டத்தில் பிரசாரம் பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என பேசியிருந்தார். இதனால் தேவேந்திர சமுதாய அமைப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் சாதிய பாகுபாட்டுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக-வினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக-வின் பெயரை சொல்லாமல் புறக்கணித்த அவர்கள், மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரனின் பெயரை வைக்க அதிமுக வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தலைமையில் அங்கு வந்த அமமுக-வினர் இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதன் பின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கட்சி தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்தினர். மாலையில் தனது கட்சி தொண்டர்களுடன் வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.