tn-govt

அரசு பள்ளிக் கட்டடங்கள்கூட திமுக ஊழலில் இருந்து தப்பவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

“திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் ரூ. 30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக பள்ளி திறப்பதற்கு முன்பாக இது நடந்ததால், மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. நமது சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டடங்கள்கூட, இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்களுக்குக் கணக்கே இல்லை. திமுக நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க, நமது குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது.

அதுவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை. இந்தப் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? என்ன அடிப்படையில் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? இடிந்து விழும் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது, இதுவரை திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

ஏற்கனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே இருக்கையில், தொடர்ந்து அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதன் பின்னணி என்ன? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, இவை அனைத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Even school buildings are not spared from DMK corruption: Annamalai

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest