
ஜார்க்கண்ட், பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் போன்றவர் மறைந்த சிபு சோரன் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
’ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்)’ கட்சியை நிறுவி அதன் தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக பதவி வகித்த சிபு சோரன் ஜார்க்கண்ட் என்ற இந்திய மாநிலம் உருவாவதிலும் அதன் வளர்ச்சியிலும் அசைக்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தவராகப் போற்றப்படுகிறார்.
இந்தநிலையில், வயது முதிர்ச்சியால் உடல் நலம் குன்றி கடந்த ஜூன் 19-ஆம் தேதி தில்லியிலுள்ளதொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிபு சோரன் இன்று(ஆக. 4) காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர்நீத்தார். அவருக்கு வயது 81.
அன்னாரது மறைவைத் தொடர்ந்து அன்னாருக்கு பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஜார்க்கண்ட் முதல்வரும் மறைந்த சிபு சோரனின் மகனுமான ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள உருக்கமான இரங்கல் பதிவில், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் பழங்குடியின மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு நிழலைப் போலத் திகழ்ந்தவர் சிபு சோரன் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: அவர் தமது இறுதிமூச்சு வரை போராடினார். ஆனால், இன்று, அந்த நிழல் மறைந்துவிட்டது. அவரை எப்போதும் நாம் நினைவில் கொண்டிருப்போம். ஒரு சிறந்த மனிதன் நம்மைவிட்டு நீங்கிவிட்டார்’ என்றார்.