WhatsApp-Image-2025-08-02-at-10.03.31-1

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா கடத்தியது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் கடந்த 29-ஆம் தேதி மாரிமுத்துவை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 29-ஆம் தேதி மாலை, மூணாறுக்கு பேருந்தில் சென்ற மாரிமுத்துவை சிறுத்தைப் பல் கடத்தியதாக வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாரிமுத்து

29-ஆம் தேதி இரவு முழுவதும் வனத்துறை அதிகாரிகள் மாரிமுத்துவை தாக்கி உள்ளனர். இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து உயிரிழந்துள்ளார். இதை மூடிமறைக்க அவர் கழிவறைக்குச் சென்றதாகவும், அப்போது, அங்குள்ள கம்பியில் வேஷ்டியைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மாரிமுத்து கொலை தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணை உத்தரவிட வேண்டும். அத்துடன் வனத்துறை ஊழியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதுவரை மாரிமுத்துவின் உடலை வாங்கப்போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நித்யகலா ஆய்வு மேற்கொண்டார். அதில், வனச்சரக அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், மாரிமுத்து உயிரிழந்து கிடந்த கழிவறை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதி நித்யகலா, மாரிமுத்துவை விசாரணை செய்த வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார்.

பணியிடை நீக்கம்

தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீதிபதி நித்யகலா முன்னிலையில், மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் இருந்து மாரிமுத்துவின் உறவினர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாரிமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், மாரிமுத்துவை அழைத்துச் சென்று விசாரணை நடத்திய வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமார் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உடுமலைப்பேட்டை வனச்சரகர் வாசு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest