
பழநி முருகன் கோவிலுக்குக் கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கறிஞரான பிரேமலதா என்பவர் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தோடு வந்துள்ளார்.
சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்குவதற்காக வின்ச் நிலையத்தில் கட்டணச் சீட்டு பெறக் காத்திருக்கும்போது பணியிலிருந்த தனியார் நிறுவன பாதுகாவலர் மதுரைவீரனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடிவாரம் காவல் நிலையத்தில் மதுரைவீரன் மீது புகார் அளித்தார் வழக்கறிஞர் பிரேமலதா. புகாரின் பேரில் அடிவாரம் காவல் துறையினர் நேற்று மதுரைவீரனை விசாரணைக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர்.
கோவில் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த கோவில் அதிகாரிகள், காவலாளி மீது எந்தத் தவறும் இல்லை என்பதைக் கூறி பாதுகாவலரிடம் தகராறு செய்ததாக பிரேமலதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் காவல்துறையினர் மதுரை வீரனை மட்டும் விசாரணைக்கு அழைத்து கைது செய்வதாகவும், தாங்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பழநி கோவிலில் டிக்கெட்டுகள் வழங்கும் பணி, பேட்டரி கார்கள், பாதுகாப்புப் பணிகள், ரோப் கார், மின் இழுவை ரயில் சேவைகள் எல்லாம் முடங்கியதால் பக்தர்கள் அவதியுற்றனர்.
இரவு 10 மணியைத் தாண்டியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மதுரை வீரனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியாதபடி பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக கோவில் உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் பிரேமலதாவிற்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருக்கைகளைப் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருதரப்பும் 12 மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் அடிவாரம் காவல்துறையினர் பாதுகாவலர் மதுரை வீரன், வழக்கறிஞர் பிரேமலதா என இருதரப்பு மீதும் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இரவு 1 மணி அளவில் போராட்டம் நிறைவடைந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.