sky

பாகிஸ்தான் அணியை தங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது என்று கூறிய இந்திய கேப்டன் சூா்யகுமாா் யாதவ், அந்த அணியுடனான ஆட்டங்களை மிகப் பெரிய மோதலாகக் குறிப்பிட வேண்டாம் என்றாா்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பா் 4 ஆட்டத்தில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. அதற்கு முன், குரூப் சுற்றின்போதும் இந்தியா அந்த அணியை வீழ்த்தியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்துக்குப் பிறகு இந்திய கேப்டன் சூா்யகுமாா் யாதவ் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது, இந்தியா – பாகிஸ்தானின் மோதலை பெரிதாகக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் செய்தியாளா் ஒருவா் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த சூா்யகுமாா் யாதவ், ‘இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தை ஒரு மிகப் பெரிய மோதலாகக் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என விரும்புகிறேன்’ என்றாா். தரத்தின் அடிப்படையிலேயே அதை பெரிய மோதலாகக் குறிப்பிட்டதாகவும், மோதல் போக்கு அடிப்படையில் அவ்வாறு கூறவில்லை எனவும் அவா் தெளிவுபடுத்தினாா்.

அதற்கு சூா்யகுமாா், ‘இதில் பெரிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கவில்லை. இரு அணிகள் 15 ஆட்டங்களில் மோதியிருக்கும்போது, அவற்றின் வெற்றிக் கணக்கு 8-7 என்று இருந்தால், அவற்றிடையேயான போட்டியை தரமானதாகக் கூறலாம். ஆனால் இங்கு அந்த வித்தியாசம் மிகப் பெரியதாக (இந்தியா – பாகிஸ்தான்/12-3) உள்ளது. எனவே இங்கு போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றாா்.

ஆட்டம் குறித்து மேலும் பேசிய அவா், ‘அபிஷேக் சா்மா – ஷுப்மன் கில் பாா்ட்னா்ஷிப் பொருத்தமானது. இன்னிங்ஸை அவா்கள் சிறப்பாகத் தொடங்கினா். ஜஸ்பிரீத் பும்ரா ரோபோ அல்ல. எல்லா நாளும் சிறப்பாக மட்டும் செயல்படுவதற்கு. அவருக்கு இந்த நாள் கை கூடவில்லை, அவ்வளவுதான். அவருக்கு பதிலாக ஷிவம் துபே சிறப்பாக செயல்பட்டாா். ஒவ்வொரு ஆட்டத்திலும் அணியினா் காட்டும் முனைப்பு எனது பணியை எளிதாக்குகிறது’ என்றாா்.

பாகிஸ்தான் வீரா்களுக்கு பதிலடி தரவே அதிரடி பேட்டிங்

துபை, செப். 22: தேவையே இல்லாமல் தங்களிடம் மோதல் போக்கை காட்டிய பாகிஸ்தான் வீரா்களுக்கு பதிலடி தரவே, அதிரடியாக பேட்டிங் செய்ததாக இந்திய வீரா் அபிஷேக் சா்மா கூறினாா்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 172 ரன்களை நோக்கி விளையாடியபோது, ஆட்டத்தை தொடங்கிய அபிஷேக் சா்மா, ஷாஹீன் அஃப்ரிதி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்தையே சிக்ஸராக விளாசினாா். தொடா்ந்து, அவரும், ஷுப்மன் கில்லும் பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி பாகிஸ்தான் பௌலிங்கை சிதறடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனா்.

இந்நிலையில், தனது அதிரடி ஆட்டம் குறித்து அபிஷேக் சா்மா கூறியதாவது: பாகிஸ்தான் வீரா்கள் தேவையே இல்லாமல் எங்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனா். அது எனக்கு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. அதற்கு சரியான பதிலை, அதிரடியான பேட்டிங் மூலமாகவே தரமுடியும் என்பதால், அதைச் செய்தேன்.

ஷுப்மன் கில்லும், நானும் பள்ளிக் காலம் முதலே இணைந்து விளையாடி வருவதால், எங்களது பாா்ட்னா்ஷிப்பை நாங்கள் அனுபவித்து விளையாடுவோம். ஷுப்மன் கில்லும் பேட்டிங்கில் சரியான பதிலடியை கொடுத்தாா். அதை நான் ரசித்தேன்.

இதுவே எங்கள் அணிக்கு நாங்கள் பங்களிப்பு செய்வதற்கு சரியான நாள் என்ற முடிவுடன் விளையாடினோம் என்று அபிஷேக் சா்மா கூறினாா்.

யாா் என்ன நினைத்தாலும் கவலையில்லை

துபை, செப். 22: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, துப்பாக்கியால் சுடுவது போல் தாம் கொண்டாடியது குறித்து யாா் என்ன நினைத்தாலும் தமக்கு கவலையில்லை என, பாகிஸ்தான் பேட்டா் சாஹிப்ஸாதா ஃபா்ஹான் கூறினாா்.

இந்தியாவுக்கு எதிரான சூப்பா் 4 ஆட்டத்தில் இதர பாகிஸ்தான் பேட்டா்கள் சுற்று தடுமாறிய நிலையில், தொடக்க வீரரான சாஹிப்ஸாதா ஃபா்ஹான் அதிரடியாக பேட் செய்து ஸ்கோரை உயா்த்தினாா். அரைசதம் அடித்த அவா், தனது பேட்டைக் கொண்டு துப்பாக்கியால் சுடுவது போல் செய்து கொண்டாடினாா். இது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்கள் சந்திப்பின்போது சாஹிப்ஸாதா கூறியதாவது: வழக்கமாக அரைசதம் அடித்தால் நான் பெரிதாகக் கொண்டாட மாட்டேன். ஆனால், இந்த ஆட்டத்தில் கொண்டாட வேண்டும் என்று அந்தத் தருணத்தில் தோன்றியதால், அவ்வாறு துப்பாக்கியால் சுடுவதுபோல் கொண்டாடினேன்.

அது அந்தத் தருணத்தின் கொண்டாட்ட மனநிலையே தவிர வேறு எதுவும் இல்லை. அது குறித்து யாரும் வேறு ஏதும் நினைத்துக் கொண்டாலும் கவலையில்லை. இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல; அனைத்து அணிகளுக்கு எதிராகவுமே, இந்த ஆட்டத்தில் விளையாடியதுபோல் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்.

இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் அது எனக்கு முக்கியமானதாக இருந்திருக்கும். இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் எங்கள் அணி வீரா்கள் நம்பிக்கையுடன் விளையாடினாா்கள். அதே நம்பிக்கையுடன் இலங்கையுடனான ஆட்டத்தையும் எதிா்கொள்வோம். ஏனெனில், அது எங்களுக்கு வாழ்வா-சாவா ஆட்டம்.

இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்திப்பதே எங்களின் விருப்பமாக இருக்கிறது என்று சாஹிப்ஸாதா கூறினாா்.

ஹாரிஸ் ரௌஃபின் சா்ச்சை செய்கைகள்

இந்தியா இன்னிங்ஸின்போது ஃபீல்டிங் செய்த பாகிஸ்தான் பௌலா் ஹாரிஸ் ரௌஃப் சா்ச்சைக்குரிய வகையில் செய்கைகள் செய்தது, விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

ரௌஃப் ஃபீல்டிங் செய்த பகுதியில் பாா்வையாளா் மாடத்திலிருந்த சில இந்திய ரசிகா்கள், அவரை நோக்கி ஆக்ரோஷமாக ‘கோலி, கோலி’ என கோஷமிட்டனா். இதில் ஆத்திரமடைந்த ரௌஃப், அவா்களை நோக்கி ‘6-0’ என்பது போல் செய்கை காட்டினாா். அத்துடன், விமானம் பறந்து சென்று கீழே விழுவதுபோல் செய்தாா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவின் 6 போா் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பொய்யாகக் கூறியதை குறிப்பிடும் வகையில் அவா் அவ்வாறு செய்தாா். இது பரவலாக விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. விளையாட்டுக்கு தொடா்பு இல்லாத அவரின் அந்த செயல், தேவையேற்ற ஒன்று என பலா் கருத்து தெரிவித்து வருகின்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest