
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத்தில் பங்கேற்று அமித் ஷா இன்று உரையாற்றினார்.
அப்போது, முந்தைய போர்களில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து அவர் விமர்சித்துப் பேசியதாவது:
”முப்படைத் தளபதிகள் கூட்டத்தில் பதிலடி கொடுக்க மோடி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கெஞ்சியதால்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்திய படைகள் பாகிஸ்தானின் போர் விமானங்கள் இயக்க முடியாத வகையில், விமான தளங்களை அழித்ததே, அவர்கள் தாமாக போர் நிறுத்தத்துக்கு முன்வர காரணாமாக அமைந்தது. தற்போது நடப்பது மோடி ஆட்சி, மன்மோகன் சிங் ஆட்சி அல்ல.
பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலை அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தாக்குதலுக்கும் நாங்கள் பதிலடி கொடுத்துள்ளோம்.
உரி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துல்லிய தாக்குதலை நடத்தினோம். தற்போது பல கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளை அழித்துள்ளோம்.
இந்த சமயத்தில் முந்தைய போர் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம். அவரின் ஆட்சியில் சிந்து நதியின் பகிர்வு 80 சதவிகிதம் பாகிஸ்தானுக்கு வழங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1971 போரில் நாடே இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தது. பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தது வரலாற்றில் எப்போதும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றாமல் சிம்லா ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பெற்றிருந்தால், இன்று பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவசியமே இருந்திருக்காது.
நீங்கள் பாகிஸ்தானுக்கு நற்சான்று அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? எவ்வித அதிகாரமும் இல்லை.
சீனாவுடனான போரின் போது 30,000 க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் நேரு ஆட்சியில் சீனாவுக்கு வழங்கப்பட்டது. நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என மூன்று தலைமுறைகளைக் கடந்து அவர்களுக்கு சீனாவின் மீது அனுதாபம் உள்ளது.
உரக்கப் பேசுவதால் உண்மையை மறைத்துவிட முடியாது.” எனத் தெரிவித்தார்.