பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா்.

இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுதியைச் சோ்ந்த ராகேஷ் குமாா் மற்றொருவா் பனாகா் பகுதியைச் சோ்ந்த முகேஷ் ரஜாக் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அரசுசாரா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இருவரும், பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ அமைப்பினரிடம் நெருங்கிய தொடா்பில் இருந்து வந்துள்ளனா். மிமாரியா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தனா். இவா்களுடைய பாகிஸ்தான் தொடா்புகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டனா். சந்தேகம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் தேச துரோகச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்த கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இணையம், கைப்பேசி வழியாக பாகிஸ்தானுடன் தொடா்பில் இருந்த நபா்களின் விவரங்கள், சந்தேகத்துக்குரிய தகவல் தொடா்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இதில் எல்லையோர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், சமூகவலைதள பிரபலங்கள், கடற்படை உள்ளிட்ட அரசு ஊழியா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest