PTI07162025000119A

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் புதன்கிழமை(ஜூலை 16) பேரணி நடத்தியுள்ளது.

அதில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, பாஜகவால் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுவதாகவும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் புதன்கிழமை(ஜூலை 16) பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “வங்காள மக்கள் மீது மத்திய அரசும் பாஜகவும் வைத்திருக்கும் மனப்பான்மை வெட்கக்கேடானது. மன வருத்தத்தை தருகிறது.

மேற்கு வங்கத்திலிருந்து 22 லட்சம் பேர் இடம்பெயர்ந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் உரிய சான்று, ஆவணங்கள் இருக்கின்றன. வங்காளம் பேசும் மக்கள், இடம்பெயர்ந்தவர்கள், ‘ரோஹிங்கியா முஸ்லிம்களா?’ இதனை உங்களால் நிரூபிக்க முடியுமா?அப்படியிருக்கும்போது அந்த மக்களை வங்கதேசத்துக்கு நாடு கடத்தும் உரிமை பாஜகவுக்கு எங்கிருந்து வருகிறது? மேற்கு வங்கம் இந்தியாவின் ஓர் அங்கமா? இல்லையா?

இதனையடுத்து, இன்றிலிருந்து, இனிமேல் வங்காள மொழியில் அதிகமாக பேச நினைக்கிறேன்.

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வங்காளம் பேசும் மக்கள் மீது சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்களைச் சிறைப்பிடிக்க அறிவுறுத்தியிருப்பதாக எனக்கு தெரிய வந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன். வெறுப்புணர்வால் இந்த நடவடிக்கை பாஜகவால் எடுக்கப்படுகிறது.

பாஜக இது போன்ற கொள்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், அதற்கு எப்படி முடிவு கட்ட வேண்டுமென்பது திரிணமூல் காங்கிரஸுக்கு தெரியும்.

வங்காளம் பேசும் மக்களை பாஜக சிறைப்பிடித்து முகாம்களுக்கு அனுப்பினால், தேர்தலில் மேற்கு வங்கம் அரசியல் ரீதியாக பாஜகவை சிறைப்பிடிக்கும்” என்றார்.

Mamata accuses BJP of targeting Bengalis across India

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest