
புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின் தலையீடு இருப்பதாக முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒடிஸாவில் அதிகமாக நடைபெறுகின்றன. இன்றைய நாளில் ஜெய்ப்பூரில் பாலியல் வன்கொடுமை சம்பவம், ஜகத்சிங்பூர் மற்றும் மால்கன்கிரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், புரியில் பாலியல் குற்றச்செயல்… இந்தக் கொடுமைகள் நம் அனைவருக்கும் மிகுந்த வேதனையைத் தருகின்றன.
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுற்று வருவதை, இப்போது அதிகரித்துவரும் பாலியல் குற்றச் சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன.
ஒடிஸா காவல் துறையில் பல நிலைகளில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் பல்வேறு குறுக்கீடுகளையும் அரசியல் அழுத்தத்தையும் எதிர்கொள்வதன் விளைவால் – பெண் குழந்தைகள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது.
இதனிடையே, அமெரிக்க அரசு கடந்த மாதம் இந்தியாவிலுள்ள தங்கள் நாட்டு குடிமக்களின் நலன் கருதி வெளியிட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தலில், ’இந்தியாவில் குறிப்பிட்ட 6 மாநிலங்களில் சுற்றுலா பயணிகளாகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ செல்லும் அமெரிக்கர்கள், அம்மாநில தலைநகர்களைக் கடந்து பிற் பகுதிகளுக்குச் செல்வதாயின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 6 மாநிலங்களில் ’ஒடிஸாவும்’ ஒன்று என்பது கவலைக்குரிய விஷயம்.
ஒடிஸாவில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், பயங்கரவாதச் செயல்களும் குறைந்துவிட்டது. அப்படியிருக்கும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டியே, அமெரிக்காவால் மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
காவல் துறை தீர்க்கமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், இந்தப் பிரச்சினை மேலும் வளரும். காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்கள் தலையிடுவதால் மாநிலம் எங்கிலும் வன்முறையும் குற்றங்களும், அதிலும் குறிப்பாக பெண்களைக் குறிவைத்து நிகழும் குற்றங்கள் இயல்பான நடைமுறையாக பரவிவிடும் அபாயம் இருப்பதை தலைமைப் பதவியில் இருப்பவர்கள் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.