police

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்னாவின் பிப்ரா பகுதியில் சனிக்கிழமை இரவில் இச்சம்பவம் நடந்தது. 50 வயதாகும் சுரேந்திர குமாா் என்ற ஊரக சுகாதார அதிகாரி மீது அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பினா்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா், ரத்த வெள்ளதத்தில் கிடந்த சுரேந்திர குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

பாட்னாவில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி பிரபல தொழிலதிபா் கோபால் கேம்கா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி கனிம சுரங்க தொழிலுடன் தொடா்புடைய ஒருவரும், கடந்த ஜூலை 11-ஆம் தேதி மளிகை கடைக்காரா் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனா். தற்போது 4-ஆவது சம்பவம் நடந்துள்ளது.

கொலையான சுரேந்திர குமாா், பாஜகவுடன் தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது. தலைநகா் பாட்னாவில் தொடரும் கொலைகளை முன்வைத்து, முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் விமா்சித்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest