
நடிகர் பிருத்விராஜ் பான் இந்தியத் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ், மலையாள சினிமாவில் பிரபலமான நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிஃபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக நல்ல அங்கீகாரம் பெற்றார்.
குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.
இதற்கிடையே, சலார் திரைப்படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தியளவில் பிரபலமானார். எம்புரானுக்குப் பின் பெரிதாகக் கவனிக்கப்பட்டவர், தற்போது ஹிந்தியில் சர்சாமின் (sarzameen) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.
அதேநேரம், இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சலார் – 2 உள்பட இன்னும் சில பான் இந்திய கதைகளில் ஒப்பந்தமாகத் திட்டமிட்டுள்ளாராம்.
மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர் எனத் தன் அடையாளங்களை வளர்த்ததுடன் தற்போது பான் இந்திய கதைகளில் கவனம் செலுத்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் பிருத்விராஜ்!
இதையும் படிக்க: திரைப்படமாகும் நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை!