
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் ஒருவரை பாலியல் சுரண்டல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆா்சிபி அணி வீரா் யஷ் தயாள் கைது செய்யப்படுவதற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணிக்காக விளையாடி வருகிறாா் யாஷ் தயாள். திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் சுரண்டல் செய்ததாக யஷ் தயாள் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின்பேரில் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம், இந்திராபுரம் காவல்நிலையத்தில் யஷ் தயாள் மீது பிஎன்எஸ் 69-ஆவது பிரிவின்கீழ் கடந்த ஜூலை 6-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிா்த்து யஷ் தயாள் தாக்கல் செய்த மனு, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த்தா வா்மா, அனில் குமாா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவின் அடுத்த விசாரணை வரை இந்த வழக்கு தொடா்பாக யஷ் தயாள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததாக யஷ் தயாள் தரப்பு வழக்குரைஞா் கௌரவ் திரிபாதி தெரிவித்தாா்.