
மங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பிரபலமான புனித யாத்திரை நகரமான தர்மஸ்தலாவில் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் ஒருவர் கூறும் குற்றச்சாட்டுகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
கர்நாடகம் மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதுண்டு.
இந்த நிலையில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கொடூரமான முறையில் தாக்கப்பட்டு நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கோயிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மைப் பணியாளர் ஒருவர் அம்மாநில அரசுக்கு கடந்த ஜூன் 3 ஆம் தேதி எலும்புக்கூடுகளின் புகைப்பட ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கடிதத்தில் தனது பெயரைக் குறிப்பிடாத அவர், மங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது, கடந்த 1998 – 2014 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாண நிலையில் எரித்து கோயில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இந்த சம்பவங்களில் கோயில் நிர்வாகத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும், மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களின் வற்புறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை புதைத்து எரித்ததாகவும், சில எலும்புக்கூடுகளை காண்பித்தார்.
இதையடுத்து ஜூலை 4 ஆம் தேதி பெல்தங்கடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, கடந்த 13 ஆம் தேதி புகார்தாரர் பலத்த போலீஸ் பாதுகாப்பின் கீழ் பெல்தங்கடி முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தர்மஸ்தலா நகரத்தின் மையத்தில் உள்ள மஞ்சுநாதர் சன்னதி, செல்வாக்கு மிக்க குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுவதால் பல ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளில் சிலர் கோயில் நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் என்றும்,செல்வாக்கு மிகுந்தவர்கள் என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கர்நாடகம் மாநில மகளிர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் நாகலட்சுமி சௌத்ரி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியவர், காணாமல் போனவர்கள் அல்லது இறப்புகள் குறித்து குடும்பத்தினர் புகார் அளிக்கும்போது காவல்துறையினர் பெரும்பாலும் சரியாக பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
இது குறித்து புகார்தாரரின் வழக்குரைஞர்கள், மங்களூரு வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஜூலை 16 ஆம் தேதி முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து சிறப்பு புலனாய்வு குழு(எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை மனு அளித்தனர். மேலும் உள்துறை அமைச்சரிடமும் மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை போலீஸார் தாமதப்படுத்தி வருவதால், கூடுதல் டிஜிபி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடவியல் குழு அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். விசாரணை விடியோ பதிவு செய்யப்படுவதுடன் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தட்சிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று கோயில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் புகார்தாரர் தற்போது எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர் கூறிய இடத்தில் குழி தோண்டி உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருவேளை அவர் அளித்த தகவல் உண்மைக்கு புறம்பாக இருந்தால் அவர் தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்கும் பணி என்பது சாதாரணமானது அல்ல. எந்த சட்ட நடைமுறைகளும் எடுக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை குழுவுக்கு தகவல் வந்துள்ளது.
புகார்தாரர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தால் மட்டும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக கோரிக்கையை நீதிமன்றத்திலும் வைத்துள்ளோம் என்றார்.
மேலும், பிணங்களை தோண்டி எடுக்கும் நாள், நேரம், சட்ட விதிகள் அனைத்தும் விசாரணை அதிகரிகளால் தீர்மானிக்கப்படும். இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகளின் முடிவே இறுதியானது என அவர் கூறினார்.
மங்களூருவில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் நகரம் தர்மஸ்தலா. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, தர்மஸ்தலத்தை ஜெயின் ஹெக்கடே குடும்பம் நிர்வகித்து வருகிறது. தர்மஸ்தலா கோயிலின் பரம்பரை நிர்வாகி மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர ஹெக்கடே.
செல்வாக்கு, அரசியல் செல்வாக்குகளுக்கு மத்தியில், கூட்டு பாலியல் வன்கொடுமை-கொலைகள் செய்யப்பட்டு தர்மஸ்தலா கோயில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளரின் குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் அடிப்படை ஆதாரம் இருக்கிறதா என்பதை சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைகளுக்கு பிறகே தெரியவரும்.