
பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஆரம்பத்தில் இருந்தே பிகாரில் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். தற்போது ஆகஸ்ட் 1, 2025 முதல், அதாவது ஜூலை மாதக் கட்டணத்தில் இருந்தே, அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் 1.67 கோடி பிகார் குடும்பங்கள் பயனடைவார்கள்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வீடுகள் அல்லது அருகிலுள்ள பொது இடங்களில் சூரிய மின் வசதி நிறுவ முடிவெடுத்துள்ளோம்.
ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய மின்சார வசதி அமைக்க முழு செலவையும் மாநில அரசு ஏற்கும், மீதமுள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் சூரிய மின்சார உற்பத்தி 10,000 மெகாவாட் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக, அரசுத்துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.