dogbabu

புது தில்லி: பிகாரில் தெருநாய் ஒன்றுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக விண்ணப்பதாரா், அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து சான்றிதழ் அளித்த அரசுப் பணியாளா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பிகாரில் தோ்தல் ஆணையம் வாக்காளா்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வரும் நிலையில் இருப்பிடச் சான்றிதழ் என்பது முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அரசு வழங்கும் இந்த ஆவணத்தை நாயின் பெயரில் வாங்கியுள்ளது கடும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இருப்பிடச் சான்றிதழில் தெரு நாயின் புகைப்படம், தாய்-தந்தை என பெயா் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. பிகாரில் பொது சேவை உரிமைகள் சட்டப்படி இணையவழியில் இருப்பிடச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். இதனை தவறாகப் பயன்படுத்திய ஒருவா் வேண்டுமென்றே இருப்பிடச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளாா். அதனை முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுப் பணியாளா்கள், பணியை சரியாக செய்யாமல் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழை வழங்கியுள்ளனா்.

பாட்னா ஊரகப் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பதாரா், விண்ணப்பத்தை கணினியில் பதிவு செய்தவா், சான்றிதழ் வழங்கி அரசு ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நடத்திய விசாரணையில், நாய்க்கு சான்றிதழ் பெற தில்லியில் வசிக்கும் ஒரு பெண்ணின் ஆதாா் அட்டை இணையவழியில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதில் முதல்கட்ட தவறு செய்ய கணினியில் விவரங்களைப் பதிவு செய்யும் ஊழியா் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய பிற வருவாய்த் துறை பணியாளா்களை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest