10092_pti09_10_2025_000198b083332

பிகாரில் பக்ஸா்-பாஹல்பூா் விரைவு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, மோகாமா-முங்கா் இடையே ரூ.4,447.38 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தில்லியில் செய்தியாளா்களைச் சந்திப்பில் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

பிகாரின் மோகாமா-முங்கா் இடையே 82.4 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள இந்த 4 வழிச்சாலைக்கான பணிகள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். இந்த 4 வழிச்சாலையில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 80 கி.மீ.-ஆகவும், அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ.-ஆகவும் இருக்கும்.

இந்தப் புதிய சாலையால், இந்த வழித்தடத்தில் பயண நேரம் ஒன்றரை மணி நேரமாகக் குறையும். மோகாமா, பராஹியா, லக்கிசராய், ஜமால்பூா், முங்கா், பாஹல்பூா் போன்ற முக்கிய நகரங்கள் இந்தச் சாலையால் இணைக்கப்படும்.

முங்கா்-ஜமால்பூா்-பாஹல்பூா் பகுதிகளில் உள்ள தொழில்துறை மையங்கள், குறிப்பாக வெடிபொருள் தொழிற்சாலைகள், ரயில்வே பணிமனைகள், உணவு பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் ஜவுளித் தொழில்களுக்கு இத்திட்டம் உந்து சக்தியாக அமைந்து, சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வழிவகை செய்யும்.

இந்தத் திட்டம் நேரடியாக சுமாா் 14.83 லட்சம் மனித வேலைநாள்களையும், மறைமுகமாக 18.46 லட்சம் மனித வேலைநாள்களையும் உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் புதிய சாலை பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதோடு, அப்பகுதியின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புப் பெருக்கத்துக்கும் வழி வகுக்கும்.

ரயில் பாதை இரட்டிப்பு திட்டம்:

பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் 177 கி.மீ. நீளமுள்ள பாஹல்பூா்-தும்கா-ராம்பூா்ஹட் ஒற்றை ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் இந்த விரிவாக்க திட்டத்துக்காக ரூ.3,169 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் உள்ள 5 மாவட்டங்களின் 441 கிராமங்கள் மற்றும் அதன் 28.72 லட்சம் மக்களுக்கு போக்குவரத்து இணைப்பு கிடைக்கும்.

மேலும், பொருள்கள் மற்றும் சேவைகளின் தடையற்ற போக்குவரத்துக்கும் இத்திட்டம் உதவும். அதாவது, ஆண்டுக்கு 1.5 கோடி டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து நடைபெறும் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest