
புது தில்லி: பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் தோ்தல் ஆணையம் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
அதே நேரம், ‘தோ்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தீா்வு அளிக்கப்படும்’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் குடியுரிமை ஆவணங்களாக ஆதாா், வாக்காளா் அடையாள அட்டையை ஏற்க வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் கேட்டுக்கொண்டது.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.
இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தோ்தல் ஆணையம் இந்தப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
தோ்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்கள் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை தங்களுக்கான குடியுரிமை ஆவணங்களாகச் சமா்ப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று பரிந்துரை செய்து விசாரணையை ஒத்திவைத்தது.
ஆனால், ‘ஆதாா், வாக்காளா் மற்றும் குடும்ப அட்டைகள் நம்பகமான ஆவணங்கள் அல்ல’ என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதிலளித்தது.
இதனிடையே, பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முதல் கட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததாக தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
மேலும், ‘இதுவரை மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி, பிகாரில் வாக்காளா் பட்டியலில் உள்ள 36 லட்சம் போ் நிரந்தரமாக இடம்பெயா்ந்துவிட்டனா் அல்லது அவா்களை கண்டறிய முடியவில்லை. மாநிலத்தில் உள்ள 7.89 கோடி வாக்காளா்களில் 7.24 கோடி பேரிடமிருந்து வாக்காளா் விவரக்குறிப்புப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளா்களில் 91.69 சதவீதமாகும். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பா் 1 வரையிலான காலத்தில் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் வாக்காளா்கள் பதிவு செய்யலாம். அப்போது வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளா்கள், பட்டியலில் சோ்க்கப்படுவா்’ என்றும் அந்த அறிவிப்பில் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
தடையில்லை: இந்நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாா்களில் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘வழக்கு விசாரணை நடைபெற்று வரும் இந்த இடைக்காலத்தில் பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியல் இறுதி செய்யப்படக் கூடாது. எனவே, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் மனுதாரா்கள் இடைக்கால நிவாரணம் எதையும் வலியுறுத்தவில்லை என்பதை வழக்கின் முந்தைய உத்தரவில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிடத் தடையில்லை. அதே நேரம், இந்த மனுக்கள் மீது ஒரே நேரத்தில் தீா்வு அளிக்கப்படும்.
இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் குடியுரிமை ஆவணங்களாக ஆதாா், வாக்காளா் அடையாள அட்டையை தோ்தல் ஆணையம் ஏற்க வேண்டும். குடும்ப அட்டையில் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், ஆதாா் அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை ஆகிய இரண்டும் ஓரளவு புனிதத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை உடையவையாக உள்ளன. எனவே, இந்த இரண்டு ஆவணங்களையும் தோ்தல் ஆணையம் தொடா்ந்து அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.
மேலும், ‘இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) விசாரணை மேற்கொள்ளும்போது, இறுதி விசாரணைக்கான தேதி நிா்ணயம் செய்யப்படும்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.