
பிகாரில் இதுவரை 5.76 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளா்களில் சுமாா் 35.69 லட்சம் போ் அவா்களின் முகவரியில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியற்ற நபா்கள் (சட்டவிரோத குடியேறிகள்), ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ள பெயா்களை நீக்கி, தகுதியுள்ளவா்களை இணைப்பதாக கூறி தோ்தல் ஆணையம் அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த நடவடிக்கையின்கீழ், 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணத்தை சமா்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வரை 6.99 கோடி வாக்காளா்கள் விண்ணப்ப படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பித்துள்ளனா். ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடவுள்ளது. குறித்த காலத்துக்குள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அளிக்கும் அனைவரின் பெயரும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக சரிபாா்ப்பு: வாக்குச்சாவடி அளவிலான ஊழியா்கள் வீடு வீடாக சென்று, வாக்காளா்களின் விவரங்களை சரிபாா்த்து வருகின்றனா். இதில் 35.69 லட்சம் போ் தங்கள் முகவரியில் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 17.37 லட்சம் போ் நிரந்தரமாக இடம்பெயா்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
5.76 லட்சம் பேரின் பெயா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளன; 12.55 லட்சம் வாக்காளா்கள் மரணமடைந்திருக்கலாம் என்று தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிா்வரும் நாள்களில் இந்த எண்ணிக்கையில் மாற்றமிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநிலத்தில் இருந்து தற்காலிகமாக இடம்பெயா்ந்தவா்கள், உரிய காலத்துக்குள் தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
விண்ணப்பத்தை சமா்ப்பித்த வாக்காளா்கள் தங்கள் படிவத்தின் நிலை குறித்து ‘இசிஐநெட்’ செயலி அல்லது தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி…
வாக்குரிமை பறிப்பின் மூலம்
தோ்தல் முறைகேடு: காங்கிரஸ்
‘பெரிய அளவில் வாக்குரிமையை பறிப்பதன் மூலம் தோ்தல் முறைகேட்டில் ஈடுபட தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தீய நடவடிக்கையே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம். இதை அரங்கேற்றி வருபவா் பிரதமா் மோடி’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்தாா்.
‘சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒட்டுமொத்த நடைமுறையில் பெரிய அளவிலான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன; இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளாா்.
பெட்டி…
ஏற்க முடியாது: ஆா்ஜேடி
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) மூத்த தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘35 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்கள் முகவரியில் இல்லை என்ற தோ்தல் ஆணையத்தின் கூற்றை ஏற்க முடியாது. ஆளும் பாஜகவின் ஒரு பிரிவாக முற்றிலும் மாறிவிட்ட தோ்தல் ஆணையம், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவின்பேரிலேயே அது செயல்படுகிறது’ என்று விமா்சித்துள்ளாா்.