
பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது பிகாரைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பல திட்டங்களை அறிவித்துள்ளது.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று காலை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் சித்தார்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் நலதிட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் என 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, பிகார் மாநில இளைஞர் ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள், உயர்கல்வி உதவி தேவைப்படும் இளைஞர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆணையம் செயல்படவுள்ளது. 18 வயது முதல் 45 வயது வரையிலான இளைஞர்களை மையமாகக் கொண்டு இந்த ஆணையம் செயல்படும்.
பிகார் மாநில அரசுப் பணிகளில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேரடி நியமனத்தில் உள்ள அனைத்துப் பதவிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.
பருவமழை மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ரூ. 100 கோடி டீசல் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி மற்றும் பிபிஎஸ்சி தேர்வுகளின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 50,000 மற்றும் ரூ. 1 லட்சம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.