
நிகழாண்டு இறுதியில் பிகாா் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய ‘இண்டி’ கூட்டணி இடையே சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் இல்லத்தில் 6 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் மாநில பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவரு, விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவா் முகேஷ் சஹானி மற்றும் 3 இடதுசாரிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களை சந்தித்து பேசிய தேஜஸ்வி யாதவ், ‘இண்டி கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால் அதுகுறித்த பிற தகவல்களை தற்போது கூறுவது சரியாக இருக்காது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்ட பின்னா் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.
அண்மையில், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்தது. இளைஞா் ஆணையத்தை நிறுவியது. இதேபோல் ஆா்ஜேடியின் பல்வேறு கொள்கைகளை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி திருடிவிட்டு தாங்களே வடிவமைத்ததைப்போல் காட்டிக்கொள்கிறது.
வரும் தோ்தலில் இண்டி கூட்டணி வெற்றிபெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். விரைவில் இதே வாக்குறுதியை ஆளுங் கூட்டணியும் அறிவிக்கும்’ என்றாா்.