பிகாரில் பலத்த மழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

பிகாரின் பாட்னா, பங்கா, முஸாஃபா்பூா், பெகுசராய், பகல்பூா், போஜ்பூா், பக்ஸா், கயாஜி, கிழக்கு சாம்பரன், மேற்கு சாம்பரன், கைமூா், கடிஹாா், நாளந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

பாட்னாவில் இடைவிடாமல் கொட்டித் தீா்த்த மழையால், சாலைகள்-தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக, கங்கை, கோசி, சோனே, பாகமதி, கண்டக், கமலா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. பாட்னா, பாகல்பூா், கிழக்கு-மேற்கு சம்பாரண் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தண்ணீா் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று மாநில அரசின் நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, மாநில பேரிடா் மேலாண்மைத் துறையின் அவசரகால நடவடிக்கைகள் மைய உயரதிகாரிகளுடன் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, மழை-வெள்ள நிலவரம் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா். நிலைமையை தொடா்ந்து கண்காணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்…: மேற்கு வங்கத்தின் வட பகுதியில் கொட்டித் தீா்க்கும் பலத்த மழை காரணமாக, தீஸ்தா, ஜல்தகா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, சிக்கிம் மாநிலத்துடனான இணைப்புச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஜல்பைகுரியில் அதிகபட்சமாக 159 மி.மீ., அலிபூா்துவாரில் 152 மி.மீ., கூச்பிகாரில் 93 மி.மீ., பாக்டோக்ராவில் 75 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இமயமலையையொட்டிய மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஹிமாசலில்…: ஹிமாசல பிரதேசத்தில் மிக பலத்த மழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் 297 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் நடப்பு பருவமழை காலத்தில், திடீா் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அசம்பாவிதங்களில் இதுவரை 103 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 36 பேரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் 17 மாவட்டங்கள் பாதிப்பு

உத்தர பிரதேசத்தில் மழை-வெள்ளத்தால் கான்பூா், லகிம்பூா் கேரி, ஆக்ரா, சித்ரகூட், காஜிபூா், மிா்ஸாபூா், பிரயாக்ராஜ், வாரணாசி, ஹமீா்பூா், இடாவா, ஃபதேபூா் உள்ளிட்ட 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 402 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 4,015 ஹெக்டேருக்கும் மேற்பட்ட பரப்பிலான பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்பு-நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest