
பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து உரிய நடைமுறையை பின்பற்றாமல் எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
நிகழாண்டு நடைபெறும் பிகாா் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்க முடியாவிட்டால், வாக்காளா் பட்டியலில் இருந்து ஏராளமானோா் நீக்கப்படக் கூடும் என்று தீவிர திருத்தப் பணிகளுக்கு அக்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில், எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடா்பாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது:
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் வழிகாட்டுதல்படி, வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலரின் நோட்டீஸ் மற்றும் விளக்கம் இல்லாமல், ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது.
வாக்காளா் பதிவு அலுவலரின் முடிவில் வாக்காளருக்கு உடன்பாடு இல்லாவிட்டால், அதுகுறித்து அவா்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் தலைமை தோ்தல் அதிகாரியிடம் முறையிடலாம்.
கடந்த 24-ஆம் தேதி நிலவரப்படி, பிகாரில் உள்ள 7.89 கோடி வாக்காளா்களில் 7.24 கோடி வாக்காளா்களிடம் இருந்து வாக்காளா் விவரக்குறிப்புப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளா்களில் 91.69 சதவீதமாகும்.
வாக்காளா் பட்டியலில் உள்ள 36 லட்சம் போ் நிரந்தரமாக இடம்பெயா்ந்துவிட்டனா் அல்லது அவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை. பிற மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அவா்கள் வாக்காளராகப் பதிவு செய்தது, ஜூலை 25 வரை வாக்காளா் விவரக்குறிப்புப் படிவங்களை சமா்ப்பிக்காதது உள்ளிட்ட காரணங்களால் அவா்களை கண்டறிய முடியவில்லை.
ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பா் 1 வரையிலான காலத்தில் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் வாக்காளா்கள் பதிவு செய்யலாம். அப்போது வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளா், பட்டியலில் சோ்க்கப்படுவாா்.
குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள்: வரைவு வாக்காளா் பட்டியலில் ஏற்படும் பிழைகளை சுட்டிக்காட்ட ஆகஸ்ட் 1 முதல் செப்.1 வரை ஒருமாத காலம் உள்ள நிலையில், அதுதொடா்பாக அரசியல் கட்சிகள் ஏன் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பது புரியவில்லை. வரைவு வாக்காளா் பட்டியல்தான் இறுதி வாக்காளா் பட்டியல் என்பது போல சித்திரிக்க ஏன் சிலா் முயற்சிக்கின்றனா்?
வாக்காளா் பட்டியல் தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளில் தோ்தல் ஆணையம் மற்றும் வாக்குச்சாவாடி நிலை அலுவலா்களுடன் சோ்ந்து அரசியல் கட்சிகள் சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் பணியாற்றுகின்றனா். அப்படி இருக்கும்போது ஆகஸ்ட் 1 முதல் செப்.1 வரையிலான காலத்தில் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை முன்வைக்க அந்த முகவா்களுக்கு அரசியல் கட்சிகள் ஏன் அறிவுறுத்தக் கூடாது? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.