
மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நாளை(செப். 11) உத்தரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.
முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இதனைத் தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்துக்கு செல்கிறார்
நிகழாண்டின் பருவமழை காலத்தில் பெரும் பாதிப்புகளை உத்தரகண்ட் சந்தித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆக.5-ஆம் தேதி மேகவெடிப்பைத் தொடர்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.
இதில் 4 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தினர் உள்பட 69 பேர் மாயமாகினர். 1,200-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 11 போ் மாயமாகினர்.
இந்த நிலையில், நாளை(செப். 11) உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடுகிறார். மாலை 4.30 மணிக்கு டேராடூன் செல்லும் பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு உயரதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
பிரதமர் வருகையால், அந்தப் பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!