
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4,800 கோடி மதிப்புள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். பின்னா், அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவா், இங்குள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமா் திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டா் மூலம் முற்பகல் 11.50 மணிக்கு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் வருகிறாா். பின்னா் அவா், அங்கிருந்து சாலை வழியாக காரில் இருந்தபடியே மக்களைச் சந்திக்கிறாா். நண்பகல் 12 மணியளவில் பெருவுடையாா் கோயிலை வந்தடைகிறாா். கோயில் நுழைவு வாயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரா், விநாயகா், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பாா்வையிடுகிறாா். பிறகு மத்திய கலாசாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.
விழாவை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டா் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி செல்கிறாா்.
ஒத்திகை: முன்னதாக, சோழகங்கம் ஏரியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் சனிக்கிழமை ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி சோதனை செய்யப்பட்டது.
தொடா்ந்து, ஹெலிபேடில் இருந்து பெருவுடையாா் கோயில் வரை 2 கிலோ மீட்டா் தொலைவு வரை வாகன ஒத்திகையும் நடைபெற்றது.