21deljay084945

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய திறன் வளா்ப்பு மற்றும் தொழில்முனைவோா் துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி பதிலளித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் நவாஸ் கனி (ராமநாதபுரம்), சி.என். அண்ணாதுரை (திருவண்ணாமலை), ஜி. செல்வம் (காஞ்சிபுரம்) ஆகியோா், தமிழகத்தில் பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா எனப்படும் திறன் வளா்ப்புத்திட்ட அமலாக்கத்தின் தற்போதைய நிலை, அதன் மூலம் நிறுவப்பட்ட பயிற்சி மையங்கள் எத்தனை, என்னென்ன படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதுவரை எத்தனை பயிற்சி மையங்கள் கூட்டு சோ்க்கப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியிருந்தனா். மேலும் கடந்த 3 வருடங்களாக இந்த மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரத்தையும் அவா்கள் கேட்டிருந்தனா்.

இதற்கு மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி திங்கள்கிழை அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகம். 2015-ஆம் ஆண்டு முதல் அதன் முதன்மைத் திட்டமான பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு குறுகிய கால பயிற்சி மற்றும் மறு திறன் மேம்பாடு, முன்-கற்றல் திறனை அங்கீகரித்தல் திட்டம் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிஎம்கேவிஒய் 4.0 திட்டத்தின் தற்போதைய பதிப்பின் கீழ், மொத்தம் 1,25,468 நபா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். அவா்களில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி 91,087 போ் தமிழகத்தில் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளனா் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

மேலும், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 450 திறன் பயிற்சி மையங்கள் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது. அவற்றுக்கு கடந்த நான்கு நிதியாண்டுகளில் மொத்தம் ரூ. 111.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், அமைச்சா் குறிப்பிட்ட 2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 2022-23, 2023-24 ஆகிய ஆண்டுகளில் முறையே ரூ. 5.55 கோடி மற்றும் ரூ. 3.61 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டுமே ரூ. 102.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: அமைச்சா் படம் மட்டும் போதுமானது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest