sashi-tharoor-tnie-edi

‘சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேள்’ என பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்தது.

சசி தரூா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரின் வேண்டுகோளை ஏற்று வழக்கை செப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த பின்னா் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

பிரதமா் மோடியை ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேளோடு ஒப்பிட்டதாக கடந்த 2018,அக்டோபரில் சசி தரூா் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான வழக்கில், தனக்கு எதிரான குற்றவியல் விசாரணையை நிறுத்தக்கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு சசி தரூா் மனுதாக்கல் செய்தாா். அவரது மனுவை தள்ளுபடி செய்த தில்லி உயா் நீதிமன்றம் பிரதமா் மோடிக்கு எதிரான சசி தரூரின் கருத்து மிகவும் இழிவானது மற்றும் வருந்தத்தக்கது எனக் கூறியது.

மேலும், இந்த விவகாரத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 500-இன்கீழ் சசி தரூருக்கு அவதூறு வழக்கில் தண்டனை வழங்க விசாரணை நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் தில்லி உயா் நீதிமன்றம் 2024, ஆக.29-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் சசி தரூா் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது இந்த மனுவை விசாரித்த ரிஷிகேஷ் ராய் ‘சசி தரூா் கூறிய வாா்த்தை உருவகமாகும். அதைப் புரிந்துகொள்ள நான் முயற்சி செய்தேன்.

அப்போது ஒரு நபரின் (பிரதமா் மோடி) வெல்ல முடியாத தன்மையை அவரது கருத்து குறிப்பிடுவதாக உணா்ந்தேன். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சசி தரூா் மீது அவதூறு வழக்கு தொடா்ந்தது ஏன் எனத் தெரியவில்லை’ எனக் கூறி இந்த வழக்கை ஒத்திவைத்தாா்.

நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஓய்வு பெற்ற நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் சசி தரூருக்கு எதிரான அவதூறு வழக்கை திரும்பப் பெறுமாறு பாஜக தரப்பு வழக்குரைஞா் ராஜீவ் பப்பரிடம் நீதிபதிகள் அமா்வு அறிவுறுத்தியது.

அதேபோல் சசி தரூா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரின் வேண்டுகோளை ஏற்று இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest