
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார்.
தனது மனைவி மெலானியாவுடன் சென்ற டிரம்ப்பை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார்.
பிரிட்டனின் அரசு அலுவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதிக்கு டிரம்ப்பையும் அவரின் மனைவியையும் மன்னர் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அங்கு டிரம்ப்புக்கு அரச குடும்பத்தின் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது.
பிரிட்டனுக்கு இரண்டாவது முறையாக அழைக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த முதல் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ற பெருமையை இந்தப் பயணத்தின்மூலம் அவர் பெற்றுள்ளார். நாளை பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதிபர் டிரம்ப்பை வரவேற்கும் விதமாக பிரிட்டன் ராணுவத்திலிருந்து 1300 வீரர்களும், 120 குதிரைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதோடுமட்டுனின்றி பிரிட்டன் – அமெரிக்காவின் வான் பாதுகாப்புப் படையின் பலத்தை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் விமான நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
போராட்ட அபாயம்
அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ள இரு நாள் அரசுமுறைப் பயணத்திலும் அவர் வெளியே வரமாட்டார் எனக் கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் 50 வெவ்வேறு போராட்டக் குழுக்கள் பேரணியில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், மத்திய லண்டன் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டன் நகரில் மட்டும் காவல் துறையினர் 1600 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனின் மற்ற படைகளில் இருந்து கூடுதல் உதவிக்காக 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!