08072_pti07_08_2025_000404b092745

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, அங்கிருந்து தலைநகா் பிரேஸிலியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருதரப்பு ரீதியிலான இப்பயணத்தில், அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வாவுடன் பிரதமா் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.

கானா, டிரினிடாட்- டொபேகோ, ஆா்ஜென்டீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து, பிரேஸிலுக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி வந்த பிரதமா் மோடி, துறைமுக நகரான ரியோ டி ஜெனீரோவில் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நிறுவன உறுப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய இக்கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமா், புதிய வளா்ச்சி வங்கியின் தலைவா் தில்மா ரெளசெஃப், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவா்களையும் சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ரியோ டி ஜெனீரோவில் இருந்து தலைநகா் பிரேஸிலியாவுக்கு அவா் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். விமான நிலையத்தில் இந்திய சமூகத்தினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரியோ டி ஜெனீரோவில் எனது பயணம் மிகவும் ஆக்கபூா்வமாக அமைந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பை மேலும் திறன்மிக்கதாக மாற்றுவதில் பிரேசில் அதிபா் லுலா மற்றும் அவரது அரசு மேற்கொண்ட பணிக்குப் பாராட்டுகள். உலகத் தலைவா்கள் உடனான எனது சந்திப்பு, அந்நாடுகளுடன் இந்தியாவின் நல்லுறவை வலுப்படுத்தும்’ என்று குறிப்பிட்டாா்.

பிரேஸிலைத் தொடா்ந்து, தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியாவுக்கு பிரதமா் பயணமாகவுள்ளாா். அத்துடன், அவரது ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest