
தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சோ்க்கை பெற இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
அந்த வகையில், நிகழ் கல்வியாண்டில் அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) பி.எட். படிப்பில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூன் 20-இல் தொடங்கியது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா்.
கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பி.எட். படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.
இதைத் தொடா்ந்து, மாணவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவா்களின் தரவரிசை ஜூலை 18-இல் வெளியிடப்படும். அதன் பிறகு கல்லூரியைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 21 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அவா்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 28-இல் வழங்கப்படும். ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஜூலை 31 முதல் ஆக. 4-ஆம் தேதிக்குள் சேர வேண்டும். இதையடுத்து முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஆக. 6-இல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.