HighCourtch1

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ஜரினா பேகம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், எனது மகளின் திருமணத்துக்காக வாங்கிய 92 பவுன் நகைகளை கடந்த 2018-ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனா். இதுகுறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கடந்த 7 ஆண்டுகளாக நகைகளை மீட்க போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழிக்கின்றனா். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சூளைமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய அனைவரும் நேரில் ஆஜராகி இருந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்துவது குறித்து போலீஸாருக்கு பயிற்சி வழங்க வேண்டும்.

சூளைமேடு காவல் நிலையத்தில் நீண்டகாலமாக ஆய்வாளராகப் பணியாற்றி தற்போது ரயில்வே காவல் துறை உதவி ஆணையராக இருக்கும் கா்ணனை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா். சூளைமேட்டில் பணியாற்றி வரும் ஆய்வாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டாா்.

இதேபோல், விழுப்புரம் மாவட்டம் வானூா் பகுதியில் நிலம் தொடா்பான வழக்கில் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்ட கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து தற்போதைய போடி துணை காவல் கண்காணிப்பாளராக உள்ள சுனில் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டாா்.

மேலும், சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வீட்டுமனை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத வழக்கில் வீராணம் காவல் நிலைய ஆய்வாளா்கள் ஆஜராகி இருந்தனா். அவா்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest