
வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்நாட்டு செலவினம், வரி குறைப்பு தொடர்பான மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்ததால்,இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, புதிய கட்சி தொடங்குவது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில், ‘அமெரிக்கா பார்ட்டி’ எனும் புதிய கட்சியை எலான் மஸ்க் 5-ம் தேதி தொடங்கியுள்ளார். ‘2 கட்சி மட்டுமே அமெரிக்காவை ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப் போக்கை முறியடிப்போம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.