
புதுச்சேரி, பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு. சில நாள்களுக்கு முன் தன்னுடைய எதிர்வீட்டில் இருக்கும் பெண் குளிக்கும்போது, மாடியில் இருந்து இவர் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து அந்தப் பெண் தன்னுடைய கணவரிடம் அதுகுறித்துக் கூறியிருக்கிறார்.
அதுகுறித்துக் கேட்கச் சென்றபோது அவருக்கும், ராஜகுருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வாக்குவாதம் குறித்து தன்னுடைய மனைவியின் தம்பி தினேஷ்பாபுவிடம் கூறியிருக்கிறார் பெண்ணின் கணவர். இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு ராஜகுருவிடம் சென்றார் தினேஷ்பாபு.
அன்றைய தினம் பனையடிக்குப்பத்தில் நண்பர் ஒருவரின் மீன் குட்டை கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த ராஜகுருவை எழுப்பி தினேஷ்குமார், `என் அக்கா குளிக்கறதை எட்டிப் பாக்குறியா… என்று கேட்டு இரும்புத் தடியால் தாக்கியிருக்கிறார்.
தொடர்ந்து அவருடன் வந்த நண்பர்களுன் ராஜகுருவை இரும்பு மற்றும் பிளாஸ்டிக் தடியால் தாக்கிவிட்டு தப்பியோடினர். அதில் பலத்த காயமடைந்த ராஜகுருவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த ராஜகுரு, சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அதையடுத்து பெண்ணின் தம்பி தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பர்கள் சர்மா, முகிலன், சுமித், அச்சுதன் உள்ளிட்டவர்களை கொலை வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட ராஜகுருவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.