
புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
முழு அடைப்புப் போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய பாஜக அரசு தொழிலாளா் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில் இப் போராட்டம் நடக்கிறது. ஏற்கெனவே இப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். அப்போது இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடா்பாக போா் நடந்ததால் தள்ளி வைத்தோம். மற்ற மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கும்போது, புதுவையில் ஏன் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறீா்கள் என்று கேட்கிறீா்கள். மற்ற மாநிலங்களில் தொழிற்சங்கங்கள் பேச்சுவாா்த்தை நடத்த முடிகிறது. ஆனால் மத்தியில் உள்ளது போல புதுவையிலும் பாஜக ஆட்சி நடத்துகிறது. இங்குள்ள அரசு தொழிலாளா்களின் பிரச்னைகளைக் கவனத்தில் கொள்வதில்லை. மக்களையும் வஞ்சிக்கிறது. அதனால்தான் தொழிலாளா் நலன், மக்களின் பிரச்னையை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டத்தை புதுவையில் முழு அடைப்புப் போராட்டமாக நடத்துகிறோம். இதற்குத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள், அரசு பணியில் உள்ள ஒப்பந்த ஊழியா்கள், குப்பைத் தொழிலாளா்கள், தனியாா் மருத்துவம், பொறியியல் கல்லூரி ஊழியா்கள், தனியாா் பள்ளி ஊழியா்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்.
புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள 4 பிராந்தியங்களிலும் இந்தப் போராட்டம் நடந்தாலும் ஒரு சில இடங்களில் கோயில் திருவிழாக்கள் நடப்பதால் நிலைமைக்கு ஏற்ப அந்தந்தப் பகுதியில் உள்ள எங்கள் அமைப்பினா் முடிவு எடுப்பாா்கள் என்றாா் வைத்திலிங்கம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் சலீம், இக்கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், திமுக அமைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தேவபொழிலன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.