
நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் நான்காவது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 01-08-2025 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்த, இந்நிகழ்ச்சி வருகிற 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் இக்கண்காட்சியில் உரையாற்ற, எழுத்தாளர்கள், கவிஞர்கள் வரிசையில், திரைப்பட நடிகர்-நடிகைகளான ரியோ ராஜ், மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா ராஜேஷ், மிர்னாளி ரவி, ப்ரியா ஆனந்த், தேவயானி, அபர்னா தாஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது இலக்கிய வட்டாரத்தை கொதிக்க வைத்திருக்கிறது.

கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன்..!
எழுத்தாளரும் பதிப்பாளருமான ஜீவ கரிகாலன், “அறிவியக்க நிகழ்வாகக் கருதப்படும் புத்தகக் கண்காட்சிகளில் சமூக, இலக்கிய செயல்பாடற்ற பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எழுத்தாளர்களை ஓரம்கட்டுவதாகவே பார்க்கிறோம். கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் அரசு செயல்பட்டால், அது நிச்சயமாக இலக்கிய திருவிழாவாக இருக்காது. திரைப் பிரபலங்களை வைத்து நூல்களை ப்ரோமோஷன் செய்ய நவீன உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும்போது, கண்காட்சியில் மேடை போட்டுத்தர வேண்டிய தேவையென்ன? அதற்குண்டான பொருட் செலவுகள் என்ன? திரைப் பிரபலங்களுக்கு பெருந்தொகை தரப்படும் அதே வேளையில், கிராமப்புற நூலகங்கள் மிகவும் நலிந்த நிலையில் கண்டுகொள்ளப்படாத நிலையிலேயே இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில இலக்கிய திருவிழாக்களில் எல்லாம் அரசியல், சினிமா பிரபலங்களை முற்றிலுமாகத் தவிர்த்து வரும்போது, இங்கு மட்டும் ‘வாசகர்களை ஈர்க்க நடிகர்-நடிகைகளை அழைக்கிறோம்’ என்பதை ஏற்க முடியவில்லை.
இலக்கிய வளர்ச்சி குறித்தான தமிழக அரசின் கொள்கையும் நோக்கமும் பாராட்டத்தக்க வகையில் இருக்கும்போது, நடைமுறை மட்டும் வேறாக இருப்பது வருத்தமளிக்கிறது” என்றார் வருத்தத்துடன்.
5-10% மட்டுமே திரைக்கலைஞர்கள்
சென்னை நூலக ஆணைக்குழுத் தலைவரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் இவ்விவகாரம் குறித்துப் பேசுகிறபோது, “நாகை புத்தகக் கண்காட்சிக்கு நடிகைகள் மட்டுமே அழைக்கப்பட்டிருப்பதாக தோற்றத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. எழுத்தாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என மொத்த அழைப்பாளர்களில் 5-10% மட்டுமே திரைக்கலைஞர்கள் இருப்பார்கள். முக்கிய நகரங்களைத் தவிர்த்து எத்தனையோ மாவட்ட புத்தக கண்காட்சிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆக, திரைபிரபலங்களுக்காக அழைப்பு என்பதை பொதுமக்களை கண்காட்சிக்கு வரவழைக்கும் வாய்ப்பாகத்தான் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, ஜெயமோகனின் ‘அறம்’ புத்தகம் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நடிகை ப்ரியா பவானி சங்கரின் பேச்சும் வைரலானது.
இறுதியில் வாசிப்பு மக்களை சென்றடைவது மகிழ்ச்சிக்குரியதுதானே. ‘நவீன எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் புத்தக கண்காட்சிக்கு அழைப்புவிடுக்க வேண்டும்’ என எண்ணம் மேலோங்கியிருக்கிறது. புத்தக கண்காட்சியாக மட்டுமே இல்லாமல் கலை இலக்கிய திருவிழாவாக அணுகும்போது எழுத்தாளர்களை மட்டும் அழைக்க வேண்டும் என்பது சாத்தியமற்றது.
ஒருபக்கம் சினிமா வாய்ப்பு கிடைக்காதா, நம் படைப்புகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என எதிர்பார்த்துவிட்டது மறுபக்கம் திரைக்கலைஞர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்தால் ஓலமிடுவது இரட்டை நிலைப்பாடு என்பேன். குறிப்பாக, நடிகைகளுக்கு பெரும் தொகை தரப்படும் என்பது கற்பனையே” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இளம் எழுத்தாளர்கள், “மாவட்ட அளவிலான புத்தகக் கண்காட்சி என வரும்போது மண்சார் மூத்த, இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுகத்தை கொடுக்கும் விதமானதாகவே நிகழ்ச்சி இருந்திருக்க வேண்டும். ஆனால், புத்தகத் திருவிழாவின் அழைப்பிதழ்களே நடிகைகளின் பெயர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது எங்களை அவமதிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இலக்கிய வட்டாரமே கொதித்துப் போயிருக்கிறது.
திரைப் பிரபலங்களும் தங்களது ரசிகர்களுடன் வந்து, புத்தகக் கண்காட்சியில் அட்ராசிட்டி செய்வதை இம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டும்காணாமல் இருப்பதுதான் உச்சக்கட்ட வேதனை. ‘திரைப் பிரபலங்களைப் பார்க்கக் கூடும் ரசிகர் கூட்டம், வாசிப்பை நோக்கி நகரும் என அரசுத் தரப்பு சமாளிப்பது பெரும் அபத்தம்” என்றனர் கொதிப்புடன்.
இறுதியாக நம்மிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் “2024-ம் ஆண்டு நடந்த புத்தக திருவிழாவில் 19 விருந்தினர்களில் இரு திரைக்கலைஞர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தோம். இம்முறை 53 சிறப்பு விருந்தினர்களில் 5 திரைக் கலைஞர்களை அழைத்திருக்கிறோம்.
ஆக 5 சதவீதத்துக்கும் கீழான எண்ணிக்கையில்தான் திரைக்கலைஞர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். புத்தக திருவிழாவுக்கு வருகைதரும் மக்களுக்கு பரந்துபட்ட அனுபவம் தேவை என்பதால் திரைக் கலைஞர்களையும் அழைக்கிறோம். மற்றபடி அனைவரும் கவிஞர்களும் எழுத்தாளர்களுமே. கடந்த ஆண்டு உள்ளூர் கலைஞர்களை அழைத்து பேச வைத்தபோது பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிவிட்டதால் இம்முறை சிறப்பு விருந்தினர்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்திருக்கிறோம். அப்படி அழைக்கப்படாத ஒருசிலர் கடுப்பில், நடிகைகளை வைத்து விழா நடத்துவதுபோல் பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், அதில் துளியும் உண்மையல்ல” என்கிறார்.