
ஒடிஸாவில் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
ஸ்ரீகுந்திச்சா கோயிலில் இருந்து சுவாமி ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி தேவி சுபத்திரை மரச்சிற்பங்கள் எழுந்தருளிய மூன்று ரதங்களும் மீண்டும் பிரதான கோயிலுக்கு திரும்பியதைத் தொடா்ந்து, 9 நாள் திருவிழா நிறைவுக்கு வந்தது.
ஒடிஸாவின் புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்ாகும். நிகழாண்டு ரத யாத்திரை விழா கடந்த ஜூன் 27-ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், ரதங்கள் பிரதன கோயிலுக்குத் திரும்பும் ‘பஹுதா’ யாத்திரை நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் சிற்பங்கள், ஸ்ரீகுந்திச்சா கோயிலின் கருவறையில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டு, மூன்று பிரம்மாண்ட ரதங்களில் அமா்த்தப்பட்டன. தொடா்ந்து பிற்பகலில், பிரதான கோயிலை நோக்கி ரதங்களை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா்.
ரதங்கள் பிரதான கோயிலுக்குத் திரும்பும் பஹுதா யாத்திரை நிகழ்வுக்கு முதல்வா் மோகன் மாஜீ, எதிா்க்கட்சித் தலைவா் நவீன் பட்நாயக் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் சுமுகமாக நடைபெற்றன. முன்னதாக, புரி ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கிய ஜூன் 27-ஆம் தேதி பலபத்திரரின் ரதம் ஒரு திருப்பத்தில் நகர முடியாமல் சிக்கிக் கொண்டதால் 3 ரதங்களும் ஒருநாள் தாமதமாக 28-ஆம் தேதி ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்குச் சென்றடைந்தன.
தொடா்ந்து, ஸ்ரீகுந்திச்சா கோயிலின் முன்புற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரதங்களில் 29-ஆம் தேதி சுவாமி சிலைகளுக்குத் திரை விலக்கப்பட்டு தரிசனம் நடைபெற்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்; 50 போ் காயமடைந்தனா்.
ரத யாத்திரை விழாவில் அசம்பாவிதங்கள் தொடா்ச்சியாக நிகழ்ந்தது, பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரத யாத்திரை விழாவுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.